இடுக்கியில் தென்மேற்கு பருவ மழை தீவிர;ம் இருவர் பலி, பாதிப்புகள் அதிகரிப்பு
இடுக்கியில் தென்மேற்கு பருவ மழை தீவிர;ம் இருவர் பலி, பாதிப்புகள் அதிகரிப்பு
ADDED : மே 29, 2025 12:39 AM

மூணாறு : இடுக்கி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை ஆரம்பத்திலேயே தீவிரமடைந்து சேதங்கள் அதிகரித்து வருகின்றன.
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை வழக்கத்தைவிட வெகுமுன்னதாக மே 24ல் துவங்கியது. இடுக்கி மாவட்டத்தில் ஆரம்பம் முதல் மழை தீவிரமடைந்துள்ளது. ஐந்து நாட்களில் சராசரி மழை 315.59 மி.மீ., பதிவானது. இதே கால அளவில் 37 மி.மீ., மட்டும் மழை பதிவாகும். தற்போது 620 சதவிகிதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. வீடுகள், ரோடுகள் சேதமடைந்ததுடன் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கின.
நேற்று காலை 8:00 மணியுடன் மாவட்டத்தில் சராசரி 49.56 மி.மீ., மழை பெய்தது. அதிகபட்சமாக மூணாறில் 120 மி.மீ., மழை பதிவானது.
கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை உள்பட மாவட்டத்தில் பெரும்பாலான ரோடுகளில் மண் சரிந்தும், மரங்கள் சாய்ந்தும் போக்கு வரத்து தடைபட்டன. மூணாறு அருகே கல்லார் வட்டையாறு பகுதியில் ரோடு சேதமடைந்ததால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மூணாறில் இருந்து கொச்சி செல்லும் வாகனங்கள் இரண்டாம் மைலில் இருந்து ஆனச்சால், இருட்டு கானம் வழியாக திருப்பி விடப்பட்டன. கல்லார்குட்டி, மலங்கரா அணைகளில் 5 மதகுகள் பாம்ப்ளா அணையில் 2 மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மூணாறு, வட்டவடை, தேவிகுளம், மாங்குளம், சாந்தாம்பாறை ஆகிய ஊராட்சிகளிலும், பீர்மேடு, இடுக்கி, உடும்பன்சோலை ஆகிய தாலுகாக்களில் பல்வேறு ஊராட்சிகளிலும் 3 முதல் 5 நாட்கள் வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்பகுதிகளில் தொலை தொடர்பு சேவையும் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
மழையால் கடந்த ஐந்து நாட்களில் இருவர் பலியாகினர். நெடுங்கண்டம் அருகே பாம்பாடும்பாறையில் தனியார் ஏலத்தோட்டத்தில் வேலை செய்த மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளி மாலதி 21, மே 25ல் மாலை கணவருடன் விறகு சேகரிக்கச் சென்றபோது மரக்கிளை முறிந்து விழுந்து இறந்தார். வண்டன்மேடு அருகே கடைசிகடவு பகுதியைச் சேர்ந்த ஏலத்தோட்ட தொழிலாளி எல்சபத் 55, மீது நேற்று பணியின் இடையே மரம் சாய்ந்து இறந்தார்.
மாவட்டத்திற்கு இன்றும், நாளையும் அதிதீவிர மழைக்கான ' ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.