புரி ஜெகன்நாதர் ரதத்தின் 3 சக்கரங்கள் பார்லிமென்ட்டில் நிறுவ சபாநாயகர் ஒப்புதல்
புரி ஜெகன்நாதர் ரதத்தின் 3 சக்கரங்கள் பார்லிமென்ட்டில் நிறுவ சபாநாயகர் ஒப்புதல்
ADDED : ஆக 31, 2025 01:32 AM

புவனேஸ்வர்; ஒடிஷாவின் புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் பயன்படுத்தப்பட்ட மூன்று சக்கரங்களை பார்லிமென்ட் வளாகத்தில் நிறுவ லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஒப்புதல் அளித்துள்ளார்.
ஒடிஷா மாநிலம் புரியில் உள்ள ஜெகன்நாதர் கோவிலில் ஆண்டு தோறும் நடத்தப்படும் ரத யாத்திரை சிறப்பு வாய்ந்தது. இந்த ரதயாத்திரையின்போது ஜெகன்நாதர், தேவி சுபத்ரா, பாலபத்ரர் மூன்று தனித்தனி தேர்களில் வீதி உலா வருவர்.
இதற்காக ஒவ்வொரு ஆண்டும் புதிய மரக்கட்டைகளை கொண்டு புதிய தேர்கள் உருவாக்கப்படும்.
ரத யாத்திரை நிறைவடைந்ததும் மூன்று ரதங்களின் குறிப்பிட்ட பகுதி தவிர அனைத்தும் பிரித்தெடுக்கப்பட்டு குடோனில் வைக்கப்படும். சக்கரங்கள் உள்ளிட்டவை ஏலம் விடப்படும்.
இந்நிலையில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், புரி பா.ஜ., - எம்.பி., சம்பித் பத்ரா ஆகியோர் நேற்று, புரி ஜெகன்நாதர் கோவிலில் தரிசனம் செய்ய சென்றனர்.
அவர்களை எஸ்.ஜே.டி.ஏ., எனப்படும் ஸ்ரீ ஜெகன்நாதர் கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக வரவேற்று பிரசாதம் வழங்கினர். அப்போது ரத யாத்திரையில் பயன்படுத்தப்பட்ட மூன்று தேர் சக்கரங்களை பார்லிமென்ட் வளாகத்தில் பொருத்தக்கோரி, கோவில் நிர்வாகம் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் மனு அளித்தது.
அதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா ஒப்புதல் அளித்துள்ளதாக எஸ்.ஜே.டி.ஏ., தலைமை நிர்வாகி அரவிந்த பதே தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
ரத யாத்திரையின் மூன்று ரதங்களில் இருந்து தலா ஒரு சக்கரத்தை பார்லி., வளாகத்தில் பொருத்த பரிந்துரைத்தோம். அதை சபாநாயகர் ஏற்றுகொண்டு ஒப்புதல் அளித்ததற்கு நன்றி தெரிவிக்கிறோம்.
ஒடிஷாவின் காலத்தால் அழியாத கலாசாரம், ஆன்மிக பாரம்பரியத்தின் சின்னமாக அந்த மூன்று சக்கரங்களும் டில்லி கொண்டு செல்லப்பட்டு பார்லி., வளாகத்தில் நிறுவப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.