எம்.எல்.ஏ.,க்கள் எழுப்பும் பிரச்னைகளுக்கு தீர்வு சபாநாயகர் உறுதி
எம்.எல்.ஏ.,க்கள் எழுப்பும் பிரச்னைகளுக்கு தீர்வு சபாநாயகர் உறுதி
ADDED : மார் 28, 2026 02:08 AM

புதுடில்லி: ''டில்லி சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் கீழ், எம்.எல்.ஏ.,க்கள் கேட்கும் கேள்விகள் மற்றும் பதில்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கப்பட்டு, தீர்வு காணப் படுகிறது,'' என, சபாநாயகர் விஜேந்தர் குப்தா கூறினார்.
டில்லி சட்ட சபையில் ஆளும் பா.ஜ.,வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட பலரும், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்களை கொண்டு வருகின்றனர். அந்த தீர்மானத்தின் கீழ் அவர்கள் எழுப்பும் கேள்விகள், முறையாக விசாரிக்கப்படுவதில்லை என கூறினர்.
குறிப்பாக, ஜங்க்புரா எம்.எல்.ஏ., தர்விந்தர் சிங் மார்வா, ஆதர்ஷ்நகர் எம்.எல்.ஏ., ராஜ்குமார் பாட்டியா, திமார்புர் எம்.எல்.ஏ., சூர்யபிரகாஷ் காத்ரி உள்ளிட்டோர் இந்த விவகாரம் குறித்து நேற்று பேசும் போது, 'சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் கீழான தங்களின் கேள்விகள் முறையாக பதிலளிக்கப்படுவதில்லை' என்றனர்.
அதுகுறித்து பேசிய முதல்வர் ரேகா குப்தா,''சட்டசபையில் நடைபெறும் விவாதங்களை உடனுக்குடன் சரி செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.
பின் பேசிய சபாநாயகர் விஜேந்தர் குப்தா,''சட்டசபையில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகள் மற்றும் அவற்றிற்கான பதில்கள் உடனடியாக தீர்க்கப்படுகின்றன. அந்த கேள்விகள், முறையாக அதிகாரிகளுக்கு பட்டியலிடப்படுகின்றன,'' என்றார்.
