நல்லிணக்கத்துக்கு தயார் சபாநாயகர் காதர் திட்டவட்டம்
நல்லிணக்கத்துக்கு தயார் சபாநாயகர் காதர் திட்டவட்டம்
ADDED : மார் 16, 2025 11:39 PM

தட்சிண கன்னடா: ''வக்பு திருத்த மசோதா, அரசியல் அமைப்புக்கு எதிரானதாக இருந்தால், அதை ஏற்றுக்கொள்ள முடியாது. வகுப்பு வாதிகள் புறக்கணிக்கப்பட வேண்டும். நல்லிணக்கத்தை நிலைநாட்ட, எந்த எல்லைக்கும் செல்ல தயாராக உள்ளேன்,'' என சபாநாயகர் காதர் தெரிவித்தார்.
மங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கூட்டு பார்லிமென்ட் குழுவின் சில உறுப்பினர்களின் கூற்றுப்படி, வக்பு திருத்த மசோதா, அரசியல் அமைப்புக்கு விரோதமானது. அம்பேத்கர் அரசியலமைப்புக்கு ஏற்ப சட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். அப்போது தான் அமைதியும், நல்லிணக்கம் நிலைநாட்ட முடியும். நல்லிணக்கத்தை நிலைநாட்ட எந்த எல்லைக்கும் செல்ல தயாராக உள்ளேன்.
அதை விடுத்து, பாரபட்சமாக ஒரு தரப்பினரை குறி வைத்து சட்டம் இயற்றினால், அது சமூகத்தில் உள்ள அனைவருக்கும் தீமை விளைவிக்கும். இதற்கு உதாரணமாக, ஒலி பெருக்கி விஷயத்தில் நடந்தது.
இரவு 10:00 மணிக்கு மேல் ஒலிபெருக்கி ஒலிக்க தடை விதித்தபோது, அனைத்து சமுதாய மக்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் யக் ஷகானத்தையே நிறுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். சட்டத்தை உருவாக்கும் போது இது பற்றி யோசித்திருந்தால், இப்பிரச்னைகள் எழுந்திருக்காது.
பன்ட்வாலில் 17 வயது மாணவர் காணாமல் போனது குறித்து, மக்கள் பிரதிநிதிகள், தனி நபர்கள், வகுப்புவாதத்தை துாண்டும் வகையில் பேசினர். ஆனால் மக்கள் பதற்றம் அடையாமல், இறுதிவரை அமைதியாக இருந்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.