சபாநாயகர் மீரா குமாரின் செயலர் பதவி நீக்கம்:சி.பி.ஐ.,அதிரடி
சபாநாயகர் மீரா குமாரின் செயலர் பதவி நீக்கம்:சி.பி.ஐ.,அதிரடி
UPDATED : செப் 05, 2011 06:41 AM
ADDED : செப் 02, 2011 11:45 PM

புதுடில்லி:வருமானத்துக்கு அதிகமாக, முறைகேடான வழிகளில் சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட, லோக்சபா சபாநாயகர் மீரா குமாரின் செயலர் ஏ.பி.பதக்கின் வீடுகளில், சி.பி.ஐ., போலீசார் நேற்று அதிரடிச் சோதனை நடத்தினர்.
இதையடுத்து, நேற்று பதக், செயலர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
லோக்சபா சபாநாயகர் மீரா குமாரின் செயலராக பணியாற்றியவர் ஏ.பி.பதக். இவர் இதற்கு முன், இந்திய நெடுஞ்சாலைத் துறை அதிகாரியாக பணி செய்து வந்தார். மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் அவர் லோக்சபா சபாநாயகருக்கு செயலராக நியமிக்கப்பட்டார்.
நெடுஞ்சாலைத் துறையில் பதக் பணியாற்றிய காலத்தில், வருமானத்திற்கு அதிகமாக முறைகேடான வழிகளில் சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தும்படி சி.பி.ஐ.,க்கு, மத்திய ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டிருந்தது.இதையடுத்து, பதக் மீது வழக்கு பதிவு செய்த சி.பி.ஐ., அதிகாரிகள், டில்லி மற்றும் லக்னோவில் உள்ள பதக்கின் வீடுகளில் நேற்று அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்.
இச்சோதனை நடந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, பதக் நேற்று சபாநாயகர் செயலர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இது தொடர்பான அறிக்கையை, சபாநாயகரின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டார்.பார்லிமென்ட் வளாகத்திற்கு நேற்று பதக் வரவில்லை. பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வந்ததும், அவரது அலுவலக அறையின் முன் உள்ள பெயர் பலகை அப்புறப்படுத்தப்பட்டிருந்தது.