ADDED : ஏப் 01, 2025 09:22 PM
புதுடில்லி:பொதுக் கணக்குக் குழு உட்பட மூன்று குழுக்களை அமைத்து சபாநாயகர் விஜேந்தர் குப்தா உத்தரவு பிறப்பித்தார்.
டில்லி சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத் தொடரில், சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய தலைமை கணக்கு அதிகாரியின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்படுகின்றன.
இந்நிலையில், பொதுக் கணக்குக் குழு, ஒழுங்கு நடவடிக்கை குழு மற்றும் மதிப்பீட்டுக் குழு ஆகியவற்றை அமைத்து சபாநாயகர் விஜேந்தர் குப்தா நேற்று உத்தரவிட்டார்.
பொதுக் கணக்கு குழுவில் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் அஜய் மஹாவர், அரவிந்தர் சிங் லவ்லி, கைலாஷ் கெலாட், ராஜ்குமார் சவுகான், சதீஷ் உபாத்யாய், ஷிக்கா ராய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆதிஷி, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் குல்தீப் குமார், வீரேந்திர சிங் கடியான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஒழுங்கு நடவடிக்கை குழுவில், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் தீபக் சவுத்ரி, கஜேந்திர டிரால், அனில் கோயல், குல்தீப் சோலங்கி, ராஜ்கரண் காத்ரி, திலக் ராம் காத்ரி மற்றும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் சஞ்சீவ் ஜா, பிரேம் சவுகான், அஜய் தத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதிப்பீட்டுக் குழுவில், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கஜேந்திர சிங் யாதவ், ஹரிஷ் குரானா, குல்வந்த் ராணா, பூனம் சர்மா, சஞ்சய் கோயல், சந்தீப் செராவத் மற்றும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் இம்ரான் உசேன், சோம்தத், விசேஷ் ரவி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத் தொடரில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட போக்குவரத்து, சுகாதாரம், காற்று மாசுபாடு மற்றும் கலால் வரி குறித்த சி.ஏ.ஜி., அறிக்கைகள், பொதுக் கணக்குக் குழு விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

