ADDED : ஆக 08, 2024 05:47 PM

புதுடில்லி: லோக்சபா சபாநாயகரின் அதிகாரம் பறிக்கப்பட்டதாக, அவையில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டினார். இதற்கு உடனடியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலடி கொடுத்தார்.
லோக்சபாவில், வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா குறித்த விவாதம் நடந்தது. அப்போது கண்ணவுஜ் தொகுதி எம்.பி.,யான அகிலேஷ் யாதவ் பேசும் போது,‛‛ உங்களின் (சபாநாயகர்) அதிகாரம் மற்றும் உரிமை பறிக்கப்பட்டு உள்ளது. நீங்கள் தான் ஜனநாயகத்தின் நீதிபதி. உங்களின் சில உரிமை பறிக்கப்பட்டதாக அறிகிறேன். உங்களுக்காக நாங்கள் போராடுவோம்'' எனக்கூறினார்.
அப்போது அமித்ஷா பதிலளித்ததாவது: இந்த பேச்சு சபாநாயகர் பதவியை இழிவுபடுத்துவது போல் உள்ளது. சபாநாயகருக்கான அதிகாரம் எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமானது அல்ல. ஒட்டுமொத்த அவைக்கும் சொந்தம். யூகங்கள் குறித்து இங்கு பேச வேண்டாம். சபாநாயகர் உரிமைக்கான பாதுகாவலர் நீங்கள் அல்ல. இவ்வாறு அவர் பதிலளித்தார்.
இதன் பிறகு சபாநாயகர் ஓம்பிர்லா பேசியதாவது: அகிலேஷ் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்கள் சபாநாயகர் பதவி குறித்து கருத்துக்கூற கூடாது. இது எனது எதிர்பார்ப்பு. சபாநாயகர் குறித்து தனிப்பட்ட முறையில் எந்த கருத்தும் கூறக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.