ஆணவத்துடன் பேசுவது முதல்வர் பதவிக்கு அழகல்ல; மன்னிப்பு கேட்க அன்புமணி வலியுறுத்தல்
ஆணவத்துடன் பேசுவது முதல்வர் பதவிக்கு அழகல்ல; மன்னிப்பு கேட்க அன்புமணி வலியுறுத்தல்
ADDED : நவ 25, 2024 02:58 PM

புதுடில்லி: 'ஒரு முதல்வர் இவ்வளவு ஆணவத்துடன் பேசுவது, அந்த பதவிக்கு அழகு கிடையாது. ராமதாஸிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். வருத்தம் தெரிவிக்க வேண்டும்' என பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் எழுப்பிய கேள்வி குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, 'அவருக்கு வேற வேலையில்லை. அதனால் தான் தினமும் அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்,' என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
இது குறித்து, டில்லியில் நிருபர்கள் சந்திப்பில் அன்புமணி கூறியதாவது: ராமதாஸ் தினமும் அறிக்கை விட்டு கொண்டு தான் இருப்பார். இதற்கு எல்லாம் நான் பதில் சொல்ல தேவையில்லை என கோபத்துடன் முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துவிட்டு சென்று விட்டார். இது கண்டிக்கத்தக்கது.
இந்தியாவிலே மூத்த அரசியல் தலைவர் ராமதாஸ். அவருக்கு வயது 86. இன்று இந்திய அளவிலே, பிரதமர் மோடியால் போற்றப்பட்டு, இந்தியாவில் உள்ள அத்தனை தலைவர்களும் ராமதாசை மதிக்கிற சூழலில், ஒரு முதல்வர் இவ்வளவு ஆணவத்துடன் பேசுவது, அந்த பதவிக்கு அழகு கிடையாது. ராமதாஸ் என்ன கேள்வி கேட்டார்.
உங்களுடைய கடமை
இதில் என்ன தவறு. கவுதம் அதானியை உங்கள் இல்லத்தில் நீங்கள் எதற்கு ரகசியமாக சந்தித்தீர்கள் என்று கேட்டார். இதில் என்ன தவறு இருக்கிறது. எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்பது எங்களுடைய உரிமை. பதவியில் இருப்பவர்கள் பதில் சொல்லுவது உங்களுடைய கடமை. அதனை விட்டுவிட்டு, ராமதாஸை அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்தி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
ராமதாஸ் இல்லை என்றால், கருணாநிதி 2006ம் ஆண்டு முதல்வராக இருந்து இருக்க முடியாது. மைனாரிட்டி அரசு என்று ஜெயலலிதா தொடர்ந்து விமர்சனம் செய்த அந்த காலக்கட்டத்தில், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நாங்கள் கருணாநிதிக்கு முழு ஆதரவு கொடுத்தோம். அதனால் தான் அவர் 5 ஆண்டுகள் முதல்வராக இருந்தார். உங்களை துணை முதல்வராக ஆக்கினார். ராமதாஸ் இல்லை என்றால், உங்கள் தந்தை கருணாநிதி மெரினா கடற்கரையில், அடக்கம் செய்து இருக்க முடியாது. மணி மண்டபம் வந்து இருக்காது.
சமூக சீர்திருத்தவாதி
ராமதாஸ் சொன்ன காரணத்தினால், நாங்கள் தொடர்ந்த வழக்கை, அன்று இரவு திரும்ப பெற்றோம். இதனால் கருணாநிதியை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யலாம் என நீதிபதி தீர்ப்பு கொடுத்தார். ராமதாஸ் முடியாது என்று சொன்னால், கருணாநிதியை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்து இருக்க முடியாது. ராமதாஸ் மூத்த அரசியல்வாதி, இந்தியாவிற்கு இட ஒதுக்கீடு பெற்ற தந்த சமூக சீர்திருத்தவாதி. அவரை பார்த்து அவருக்கு வேலை இல்லை என்று சொல்வது எவ்வளவு ஆணவம்.
கருணாநிதியிடம் எந்த பாடத்தையும் நீங்கள் கற்றுக்கொள்ளவில்லை. கருணாநிதி காலத்தில், தைலாபுரம் தோட்டத்தில் இருந்து தையிலம் வருகிறது என்று சொன்னார். தினமும் அறிக்கை விடுவது எங்களுடைய யோசனைகள். அறிக்கை விடுவது எங்களுடைய கடமை, உரிமை. ஏன் அறிக்கை விடுகிறோம், தமிழக மக்கள் நலன் பெற வேண்டும். தமிழகம் வளர்ச்சி பெற வேண்டும் என்ற காரணத்தினால் அறிக்கை விடுகிறோம். இதனை நல்ல யோசனைகளாக ஏற்றுக்கொள்ள வேண்டும். நாங்கள் என்ன கேட்டோம். அதானி ஏன் சந்தித்தார்? தனிப்பட்ட சந்திப்பா?
அமெரிக்கா நீதிமன்றத்தில் தமிழகம், ஆந்திரா, ஒடிசா, சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர் ஆகிய 5 மாநில உள்ள அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பதில் சொல்வது முதல்வரின் கடமை. அமைச்சர் பதில் சொல்வரா? நீங்கள் பதில் சொல்ல வேண்டியது தானே? இது ஒரு சாதாரண கேள்வி. உங்கள் மடியில் கணம் இல்லை என்றால் பதில் சொல்லிவிட்டு போங்க, உங்களுக்கு ஏதற்கு பதற்றம்? ராமதாஸ் விசாரணை நடத்த சொல்கிறார். உண்மை வெளிவர வேண்டும். முதல்வரிடம் இருந்து ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லை.
இடஒதுக்கீடு
ராமதாஸ் இல்லை என்றால் இடஒதுக்கீடு வந்து இருக்காது. ராமதாஸ் இடம் மன்னிப்பு கேட்க வேண்டும். வருத்தம் தெரிவிக்க வேண்டும். எங்கள் தொண்டர்கள் உணர்வை கட்டுப்படுத்த முடியாது. முதல்வரே கருணாநிதி போல பக்குவமாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள். நான் சொல்லி கற்றுக்கொள்ள அவசியம் இல்லை. எதிர்க்கட்சி கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். அவமானம் செய்ய கூடாது. இது மிகப்பெரிய அதிர்ச்சியில் இருக்கிறோம். இவ்வாறு அன்புமணி கூறினார்.