தொழிலாளர்கள் பிள்ளைகளை உயர்த்தும் சிறப்பு வகுப்புகள்
தொழிலாளர்கள் பிள்ளைகளை உயர்த்தும் சிறப்பு வகுப்புகள்
ADDED : மார் 03, 2024 06:50 AM

ஹாசன்: அரசு பள்ளிகளில் இலவச கல்வி அளித்தாலும், ஆசிரியர் பற்றாக்குறை, போதிய வசதியின்மையால், நம்மில் பலரும் தனியார் பள்ளிகளில் தான் பிள்ளைகளை சேர்க்கிறோம். ஆனால், சமீப காலமாக தனியார் பள்ளிகளுக்கு நிகராக, அரசு பள்ளிகளிலும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கணினி ஆய்வகம், அறிவியல் ஆய்வகம், குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள், புரொஜெக்டர் எல்.இ.டி., திரை உட்பட பல்வேறு வசதிகள் செய்யப்படுகின்றன.
மத்திய அரசுக்கு உட்பட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் போன்று, கர்நாடக அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு, கர்நாடக பப்ளிக் பள்ளிகள் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்டன.
தனி வகுப்புகள்
இந்த வகையில், ஹாசன் மாவட்டம், ஹலேபீடு அரசு பள்ளியும், கர்நாடக பப்ளிக் பள்ளியாக மேம்படுத்தப்பட்டது. இங்கு, கூலி தொழிலாளர்கள் பிள்ளைகளுக்காக தனி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
குழந்தைகளை ஈர்க்கும் வகையில், வகுப்பறைகளை வண்ணமயமாக்கி, கன்னடம், ஆங்கில எழுத்துகளை எழுதியும், பொம்மைகள் வரையப்பட்டுள்ளன.
பல வீடுகளில், தாய், தந்தை இருவரும் கட்டட வேலை, சாலை பணி, ஏரி துார்வாரும் பணிக்கு சென்று விடுகின்றனர்.
இதனால், தங்கள் பிள்ளைகளை வேலை செய்யும் இடத்துக்கு அழைத்துச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
இத்தகைய கூலி வேலைக்கு செல்லும் பெற்றோரின் பிள்ளைகளுக்கு, கர்நாடக பப்ளிக் பள்ளியின் சிறப்பு வகுப்புகள் மிகவும் உதவியாக இருக்கிறது.
இங்குள்ள வசதிகளை பார்த்து, ஆச்சரியமடைந்துள்ள பல பெற்றோர், தங்கள் பிள்ளைகளை தாராளமாக சேர்த்து வருகின்றனர்.
சிற்றுண்டி, மதிய உணவு, வாழைப்பழம், கடலை மிட்டாய், சத்து மாவு, பால், முட்டை வழங்கப்படுகின்றன.
காலை 10:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை பிள்ளைகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
கூடி விளையாடுதல், மன வளர்ச்சியை அதிகரிக்கும் விளையாட்டுகள், நீதி கதைகளும் சொல்லி கொடுக்கப்படுகின்றன.
மிகுந்த வரவேற்பு
ஒரு வயது முதல் 3 வயது வரையிலான பிள்ளைகள் இங்கு சேர்க்கப்படுகின்றன. வீட்டில் பார்த்துக் கொள்வது போன்ற உணர்வு ஏற்படுத்தும் வகையில் வசதிகள் இருப்பதால், அப்பகுதியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த பள்ளியை நிர்வகிக்கும், பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி விருபாக் ஷப்பா கூறியதாவது:
கூலி வேலைக்குச் செல்லும் பெற்றோர், தங்கள் பிள்ளைகளை மரத்தடியில் துாங்க வைக்கின்றனர். வயல் வெளிகளில் விளையாட வைக்கின்றனர். அப்போது, பாம்பு, விஷ கிருமிகள் கடித்து ஆபத்து ஏற்படும் சம்பவங்கள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
வெயில், மழை, காற்று, துாசியால், குழந்தைகளின் உடல் நலம் பாதிக்கும். இதை கருத்தில் கொண்டு கூலி தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. குழந்தை பராமரிப்பு வீடு என்று அழைக்கின்றோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

