ADDED : ஜன 16, 2025 09:37 PM
புதுடில்லி,:சட்டசபைத் தேர்தலில் ஓட்டுப் பதிவை அதிகரிக்கும் நோக்கில் தள்ளுபடி சலுகைகளை ஏராளமான வணிகர்கள் அறிவித்து வருகின்றனர்.
டில்லி சட்டசபைக்கு வரும் 5ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. ஓட்டுப்பதிவை அதிகரிக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்கிறது.
இந்நிலையில் பிப்ரவரி 5ம் தேதி ஓட்டுப்போட்ட வாக்காளர்களுக்கு நகரம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட சந்தைகளில் தள்ளுபடிகளை வர்த்தக மற்றும் தொழில்துறை சபை நேற்று அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக இதன் தலைவர் பிரஜேஷ் கோயல் கூறியதாவது:
பிப்ரவரி முதல் வாரம் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் திருமண காலகட்டம். இதனால் தேர்தலில் ஓட்டு சதவீதம் குறையாமல் இருப்பதற்காக 100க்கும் மேற்பட்ட சங்கங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
அப்போது, பிப்ரவரி 5ம் தேதி தேர்தலில் ஓட்டுப்போடும் வாக்காளர்களுக்கு மறுநாள் பல்வேறு சந்தைகளில் தள்ளுபடி வழங்க முடிவு செய்யப்பட்டது. ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரன்ட்களில் 20 முதல் 25 சதவீதம் வரை தள்ளுபடிகள் வழங்க அதன் உரிமையாளர்கள் முன்வந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
“கணினிகள், மடிக்கணினிகள் மற்றும் தொடர்புடைய பொருட்களை அன்றைய தினம் வாங்கும் வாக்காளர்கள் 10 சதவீதம் வரை தள்ளுபடி பெறுவார்கள்,” என, நேரு பிளேஸ் சந்தையின் தலைவர் மகேந்திர அகர்வால் அறிவித்தார்.
இதேபோல், கமலா நகர் சந்தையின் தலைவர் நிதின் குப்தா, “ஓட்டுப்போட்ட பிறகு சந்தைக்கு வருபவர்களுக்கு 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்,” என்றார்.
காரி பாவோலியில் வாக்காளர்களுக்கு 5 சதவீத தள்ளுபடியை வழங்கப்போவதாக வர்த்தக சங்கத் தலைவர் பாரத் அரோரா உறுதி அளித்தார். அதே நேரத்தில் சாந்தினி சௌக்கில் உள்ள தரிபா நகைக்கடைக்காரர்கள் சங்கத்தின் தலைவர் தருண் குப்தா, தங்கம் மற்றும் வெள்ளி வாங்கும் வாக்காளர்களுக்கு 1 சதவீத தள்ளுபடியை அறிவித்தார்.
லஜ்பத் நகர் சந்தை சங்க கூட்டமைப்பின் தலைவர் கோபால் தாவர், “5 முதல் 10 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்,” என்றார்.
டில்லி ஹோட்டல் மகாசங்கத்தின் பொதுச் செயலர் பவன் மிட்டல், “அனைத்து வகையான ஹோட்டல்களும் வாக்காளர்களுக்கு அறை முன்பதிவுகளில் கூடுதலாக 20 சதவீத தள்ளுபடியை வழங்கும்,” என்று அறிவித்தார்.