மும்பை காவலாளிகளை கத்தியால் குத்திய பயங்கரவாதியை விசாரிக்கிறது சிறப்பு படை
மும்பை காவலாளிகளை கத்தியால் குத்திய பயங்கரவாதியை விசாரிக்கிறது சிறப்பு படை
ADDED : ஏப் 29, 2026 01:33 AM
மும்பை: மஹாராஷ்டிராவில், இரு காவலாளிகளை கத்தியால் குத்திய பயங்கரவாதியை, மே 4 வரை காவலில் எடுத்து விசாரிக்க, ஏ.டி.எஸ்., எனப்படும், பயங்கரவாத எதிர்ப்பு படையினருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மஹாராஷ்டிராவின் மும்பை அருகேயுள்ள மிரா ரோடு பகுதியில் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில், காவலாளியாக வேலை பார்ப்பவர்கள் ராஜ்குமார் மிஸ்ரா, சுப்ரதோ சென்.
கவலைக்கிடம் பணியில் இருந்த இவர்கள் இருவரையும் நேற்று முன்தினம் அதிகாலை, அதே பகுதியை சேர்ந்த ஜைப் சுபைர் அன்சாரி என்பவர் கத்தியால் குத்தினார். இதில், காவலாளிகள் இருவரும் காயமடைந்தனர். இதில், ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தாக்குதல் நடத்திய அன்சாரி, காவலாளிகளிடம் பெயர் என்ன என கேட்டுள்ளார். அவர்கள் கூற மறுத்த நிலையில், எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என கேட்டுள்ளார். மேலும், முஸ்லிம்கள் ஓதும் கல்மா வசனத்தை கூறும்படி கேட்டுள்ளார். அவர்கள் தெரியாது என்று கூறியதும், கத்தியால் குத்தி உள்ளார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மிரா ரோடு போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவு அடிப்படையில், ஏ.டி.எஸ்., எனப்படும், பயங்கரவாத எதிர்ப்பு படையினர் மற்றும் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை உதவியுடன் அன்சாரியை கைது செய்தனர்.
குறிவைத்து தாக்குதல் இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை ஏ.டி.எஸ்.,க்கு மாற்றி மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் உத்தரவிட்டார். விசாரணை குறித்து முதல்வர் பட்னவிஸ் கூறியதாவது:
தாக்குதலில் ஈடுபட்ட அன்சாரி, புத்தகங்கள், இலக்கியங்கள் மற்றும் இணையதளத்தில் பயங்கரவாதம் குறித்து படித்து, அதன் வாயிலாக சுயமாக பயங்கரவாதியாக மாறியவர் போல் தெரிகிறது. பிறமதத்தவரை குறிவைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, அன்சாரிக்கு வேறு பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து என்.ஐ.ஏ., மற்றும் ஏ.டி.எஸ்., அதிகாரிகள் விசாரணை நடத்துவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், நேற்று பயந்தரில் உள்ள நீதிமன்றத்தில் அன்சாரியை ஏ.டி.எஸ்., அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை மே 4 வரை ஏ.டி.எஸ்., காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
