ADDED : டிச 22, 2024 08:10 PM

புதுடில்லி: ஆட்டிசம் மற்றும் உடல் ஊனமுற்றோருக்கான ஆஷா பள்ளிகளுக்கும், ஆபத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான நேரத்தில் உதவியவர்களுக்கும் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற 12 நாய்களை ராணுவம் பரிசாக வழங்கி உள்ளது.
இந்திய ராணுவத்தின் நாய்களுக்கான படைப்பிரிவில் பல்வேறு இனத்தைச் சேர்ந்த நாய்கள் உள்ளன. இவை காவல், ரோந்து பணி, வெடிபொருட்களை மோப்பம் பிடித்தல், கண்ணி வெடிகளை கண்டறிதல், போதைப்பொருட்கள் உள்ளிட்ட கடத்தல் பொருட்களை மோப்பம் பிடித்தல், இலக்குகளை தாக்குதல், எதிரிகளை கண்டுபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக இந்த நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்திய ராணுவத்தில் நாய்களுக்கு பயிற்சி அளிக்க ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார். மீரட்டில் உள்ள கல்லூரியில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த நாய்களின் சுறுசுறுப்பு மற்றும் ஆரோக்கியத்தை பொறுத்து ஏழு முதல் எட்டு ஆண்டுகள் வரை பணியில் இருக்கும். பிறகு இந்த நாய்களுக்கு ஓய்வு அளிக்கப்படும். ஆரோக்கியம் மற்றும் சுறுசுறுப்பாக இருக்க சத்தான உணவுகள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற 12 நாய்களை 'ஆஷா' பள்ளிகளுக்கும், பேரிடர்களில் சிக்கி தவித்தவர்களுக்கு உதவியவர்களுக்கும் பரிசாக ராணுவம் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ராணுவத்தில் ஓய்வு பெற்ற நாய்களுக்கு நல்லதொரு இல்லம் கிடைக்கச் செய்யும் புது முயற்சி இது. இதன் மூலம், அவற்றை பெறும் குடும்பத்தினருக்கும், நாய்களுக்கும் இடையேயான உண்மையான அன்பு மற்றும் பாசம் அதிகரிக்கும். ஆஷா பள்ளியில் சிறப்பு தேவைகளை கொண்ட குழந்தைகளுக்கு மகத்தான பலன்களை நாய்களின் இருப்பு அளிக்கும். மேலும் அவர்களின் உணர்வுகள் மற்றும் அறிவாற்றல் திறன்களை அதிகரிக்கவும் உதவும்.
சில குடும்பங்களுக்கு, இந்த நாய்களை தத்தெடுப்பதன் மூலம், தேசத்திற்கு தன்னலமின்றி பங்களித்த உண்மையான தேசபக்தருக்கு ஒரு அன்பான வீட்டை வழங்குவதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும். அதேநேரம், குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அன்பான மற்றும் விஸ்வாசமான நட்பு கிடைக்கும்.
ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற குதிரைகள் மற்றும் நாய்களுக்கான மையத்தை ராணுவம் பராமரித்து வருகிறது. அவை உயிரிழக்கும் வரை கவுரவமாகவும் அக்கறையுடனும் நடத்தப்படுகின்றன. அவற்றுக்கு தேவையான அக்கறை, கவனிப்பு மற்றும் சிகிச்சை கிடைப்பதை இந்த மையங்கள் உறுதி செய்கின்றன. இவ்வாறு அந்த அறிக்கையில் ராணுவம் கூறியுள்ளது.