மனிதர்களை வேட்டையாடும் புலி; பிடிக்க களம் இறங்கியது வனத்துறை
மனிதர்களை வேட்டையாடும் புலி; பிடிக்க களம் இறங்கியது வனத்துறை
ADDED : ஜன 25, 2025 09:20 AM

திருவனந்தபுரம்: வயநாட்டில் மனித வேட்டையில் ஈடுபட்டுள்ள புலியைப் பிடிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. பஞ்சரக்கொல்லியில் ஜனவரி 27ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் மனந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராதா. இவர் அங்கு உள்ள பிரியதர்ஷினி எஸ்டேட் என்ற காபி தோட்டத்தில் தொழிலாளராக பணிபுரிந்தார். நேற்று காலை இவர் காபி இலைகளை பறிக்கச் சென்றபோது, தோட்டத்தில் பதுங்கியிருந்த புலி ராதாவை தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புலியை உயிருடனோ அல்லது கொன்றோ பிடிக்கும் வரை, உயிரிழந்த ராதாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல முடியாது என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மாநில அமைச்சர் சசீந்திரன் கிராமத்தினரை சந்தித்து சமாதானப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அவர்களின் கோரிக்கையை ஏற்று புலியை உயிருடனோ அல்லது கொன்றோ பிடிக்க அரசு உத்தரவு பெற்று தந்தார். மேலும், வனவிலங்கு - மனித மோதலை தடுக்க அப்பகுதியில் வேலி அமைக்கப்படும் என்றார்.
இந்நிலையில், வயநாட்டில் மனித வேட்டையாடும் புலியைப் பிடிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. பஞ்சரக்கொல்லியில் ஜனவரி 27ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவை தலைமை வன கால்நடை அதிகாரி டாக்டர் அருண் சக்கரியா வழிநடத்துகிறார்.
புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க, 28 கேமராக்கள் பொருத்தப் பட்டு உள்ளன. வன எல்லைகளில் ரோந்து பணிகளில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். புலியை பிடிக்க கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.