கடல்வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்; உளவுத்துறை எச்சரிக்கை
கடல்வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்; உளவுத்துறை எச்சரிக்கை
ADDED : மார் 09, 2026 09:16 AM

புதுடில்லி: பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பினர், கடல் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
கடந்த 2008ம் ஆண்டு கடல்வழியாக வந்த பயங்கரவாதிகள், மும்பையில் தாக்குதல் நடத்தி 166 பேரை சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் நடந்து 18 ஆண்டுகள் ஆகின்றன. இந்த சூழலில், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பினர், மீண்டும் கடல்வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக இந்திய பாதுகாப்பு படையினருக்கு ஆதாரமாக கிடைத்த வீடியோ ஒன்றில், லஷ்கர்-இ-தொய்பா சார்பில் கடற்படை என்ற தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ஹாரிஸ் தார் என்பவன் தலைமையில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கடலில் நடத்தப்படும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவது தெரிய வந்துள்ளதாக கூறுகின்றனர்.
மேலும், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், முரிட்கே, லாகூர், பகவல்பூர், கசூர், அலிபூர், கராச்சி மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மங்களா அணை, முசாபராபாத் ஆகிய இடங்களில் இதற்கான பயிற்சி முகாம்கள் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்பின் முக்கிய புள்ளிகளான ரிஸ்வான் ஹனீப் மற்றும் அமீர் ஜியா ஆகியோர் இந்தப் பயிற்சியை ஒருங்கிணைப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த வீடியோவின் மூலம் ஆட்சேர்ப்பு, பயங்கரவாத சித்தாந்தத்தை பரப்புதல் போன்ற செயல்களில் பயங்கரவாத அமைப்பினர் ஈடுபட்டு வருவதாக உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானுடனான தரைவழியிலான எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதால், பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைய கடினமான கடல் வழியைத் தேர்வு செய்துள்ளதாக உளவுத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

