ஆன்மிக கட்டுரை ..... அனேகெரே ஏரி கரையில் அழகிய ஜெயின் கோவில்
ஆன்மிக கட்டுரை ..... அனேகெரே ஏரி கரையில் அழகிய ஜெயின் கோவில்
ADDED : நவ 12, 2024 06:00 AM

கர்நாடகாவின் கடலோர மாவட்டங்கள் என்றாலே, முதலில் நினைவுக்கு வருவது அங்குள்ள சுற்றுலா மற்றும் ஆன்மிக தலங்கள் தான். குறிப்பாக உடுப்பி மாவட்டத்தில் கிருஷ்ணர், கொல்லுார் மூகாம்பிகை உள்ளிட்ட ஏராளமான பிரசித்தி பெற்ற கோவில்கள் அமைந்துள்ளன. இதில் ஒன்றான ஜெயின் கோவிலை பற்றி பார்க்கலாம்.
உடுப்பியின் கார்கலா டவுன் அனேகெரே பகுதியில் அனேகெரே ஏரி உள்ளது. 7 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள இந்த ஏரியின் மையப் பகுதியில், ஒரு ஜெயின் கோவில் உள்ளது. அந்த கோவிலை அனேகெரே பசாதி கோவில் என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர்.
இந்த கோவிலில் பார்ஷ்வநாதர், சாந்திநாதர், நேமிநாதர், அனந்தநாதர் ஆகியோரின் நான்கு முக சிலைகள் உள்ளன. இக்கோவிலில் பத்மாவதி சிலையும் அமைந்திருப்பது மிகவும் சிறப்பு.
இந்த ஏரியில் தான் மன்னர்கள் காலத்தில், அரண்மனைகளில் பராமரிக்கப்பட்ட யானைகளை குளிப்பாட்டினர் என்று சொல்லப்படுகிறது. கோவிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த பின், அங்கிருக்கும் பலகைகளில் அமர்ந்து ஏரியின் அழகை கண்டு ரசிக்கலாம். சூரிய அஸ்தமனத்தை கண்டு ரசிப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
இந்த கோவிலுக்கு செல்ல ஆண்டு முழுதும் சிறந்த நேரம் என்றும் சொல்லப்படுகிறது. கோவிலின் நடை எப்போதும் திறந்தே இருக்கும். நுழைவு கட்டணம் இல்லை.
...பாக்ஸ்...
எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து உடுப்பி 401 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது. நேரடி அரசு பஸ், ஆம்னி பஸ், ரயில் சேவை உள்ளது. விமானத்தில் செல்வோர் மங்களூரு விமான நிலையம் சென்று, அங்கிருந்து வாடகை காரில் கோவிலை சென்றடையலாம்.
-- நமது நிருபர் --***