பீஹாரில் இண்டி கூட்டணியில் பிளவு; தனித்து களமிறங்கும் ஜேஎம்எம்
பீஹாரில் இண்டி கூட்டணியில் பிளவு; தனித்து களமிறங்கும் ஜேஎம்எம்
ADDED : அக் 18, 2025 09:12 PM

பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தலில் இண்டி கூட்டணியில் இருந்து விலகி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்து உள்ளது. இது காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு நவ. 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நவ .,14ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. தேர்தலையொட்டி ஜக்கிய ஜனதா தளம், பாஜ, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தங்களின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
இதனிடையே, இண்டி கூட்டணியில் இடப்பங்கீடு விவகாரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதால் சலசலப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், பீஹார் சட்டசபை தேர்தலில் இண்டி கூட்டணியில் இருந்து விலகி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்து உள்ளது. இது இண்டி கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், ஆர்ஜேடி கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஜேஎம்எம் பொதுச் செயலாளர் சுப்ரியோ பட்டாச்சார்யா கூறியதாவது; பீஹார் தேர்தலில் 6 தொகுதிகளில் தனியாக போட்டியிட கட்சி முடிவு செய்துள்ளது. மஹாகட்பந்தன் கூட்டணியில் உள்ள கட்சிகளான ஆர்ஜேடி, காங்கிரஸிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். குறிப்பாக ஆர்ஜேடியை அணுகினோம். 2019-ல் ஜார்க்கண்டில் ஆர்ஜேடி மற்றும் காங்கிரசை ஆதரித்தோம். ஏழு தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றார். அவரையும் அமைச்சராக்கினோம். தம்தஹா, சாகாய், கடோரியா, மணிஹாரி, ஜமுய் மற்றும் பீர்பைந்தி ஆகிய தொகுதிகளில் எங்களுடைய வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளோம், என தெரிவித்தார்.
இது குறித்து பாஜ தலைவர் பிரதுல் ஷாஹ்தியோ கூறுகையில், 'பீஹார் சட்டசபைத் தேர்தலில் ஜேஎம்எம் தொகுதிகளுக்காக யாசகம் கேட்பது மிகவும் வெட்கக்கேடானது,' என்றார்.