'சித்தீஸ்' இன இளைஞர்களுக்காக விளையாட்டு பயிற்சி மையம்
'சித்தீஸ்' இன இளைஞர்களுக்காக விளையாட்டு பயிற்சி மையம்
ADDED : டிச 20, 2024 05:47 AM

தென்கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் இருந்து 500 ஆண்டுகளுக்கு முன், போர்ச்சுகீசியர்கள், 'சித்தீஸ்' இனத்தை சேர்ந்த மக்களை, இந்தியாவுக்கு அடிமைகளாக அழைத்து வந்தனர்.
இவர்களின் வாரிசுகள், கர்நாடகா உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் 50,000 பேர் வசித்து வருகின்றனர். கர்நாடகாவில் உத்தரகன்னடாவின் சிர்சி, முந்த்கோட், அங்கோலா, ஹலியல், எல்லாபூர் உட்பட பல பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
இச்சமுதாயத்தினர் பெரும்பாலும் விவசாயம், கூலி வேலை, உதவியாளர் பணிகளே செய்து வருகின்றனர். இவர்களின் உடல் பலத்தால் கடினமான பணிகளையும் சுலபமாக செய்துவிடுவர். இவர்களின் குழந்தைகளும், விளையாட்டு போட்டிகளில் சிறப்பாக செயல்படுகின்றனர்.
இவர்களின் முன்னேற்றத்துக்காக, ஆர்.சி.பி., எனும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கோ ஸ்போர்ட்ஸ் கூட்டமைப்பு இணைந்து, சித்தீஸ் இன மக்கள் குழந்தைகளுக்கென விளையாட்டு பயிற்சி மையத்தை துவக்கி உள்ளனர்.
இங்கு, முதல் கட்டமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சித்தீஸ் இனத்தை சேர்ந்த, 25 மாணவ - மாணவியருக்கு விளையாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. அத்துடன், அவர்கள் தங்க விடுதி, சமையல் அறை, அவர்களுக்கு பயிற்சி அளிக்க பயிற்சியாளர்கள், உள் உடற்பயிற்சி மையம் அமைந்துள்ளது.
இம்மையத்தை துவக்கி வைத்த ஆர்.சி.பி., அணி நிறுவன துணைத் தலைவர் ராஜேஷ் மேனன் கூறியதாவது:
இம்முயற்சி, விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்று துடிக்கும் இளம் வீரர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும். இந்தியாவில் திறமையான விளையாட்டு வீரர்கள் பலர் உள்ளனர். நீங்கள் வட மாநிலங்களுக்கு சென்றால், மல்யுத்தம் இருக்கும். வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்றால் பாக்சிங் இருக்கும். அதுபோன்று சித்தீஸ் சமுதாயத்தினரை ஊக்குவிப்பதற்காக, கர்நாடகாவில் இந்த வசதி செய்யப்பட்டு உள்ளது.
அத்துடன், இவர்களுக்கு தேசிய அளவிலான பயிற்சியாளர்கள் பயிற்சி அளிப்பர். வருங்காலத்தில், விளையாட்டு முகாம் நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது. அத்துடன் உணவியல் நிபுணர்கள், விளையாட்டு உளவியலாளர்களை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இச்சமுதாயத்தை சேர்ந்த விளையாட்டு வீராங்கனையும், இந்திய ரயில்வே ஊழியருமான கமலா சித்தீஸ், பல சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் பெற்றுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -