இலங்கை அதிபர் இன்று வருகை: மீனவர் பிரச்னைக்கு ஆலோசனை
இலங்கை அதிபர் இன்று வருகை: மீனவர் பிரச்னைக்கு ஆலோசனை
ADDED : டிச 15, 2024 12:46 AM

இலங்கையின் அதிபர் அனுரா குமார திசநாயகே, முதல் முறையாக நம் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தப் பயணத்தின்போது, மீனவர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுஉள்ளது.
நம் அண்டை நாடான இலங்கையில், கடந்த செப்டம்பரில் நடந்த தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் அனுரா குமார திசநாயகே மிகப்பெரும் வெற்றியைப் பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார், அவர் அதிபராக பதவியேற்ற பின், முதல் முறையாக நம் நாட்டுக்கு மூன்று நாள் அரசு முறை பயணமாக இன்று வருகிறார்.
இந்த பயணத்தின்போது, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை சந்திக்கிறார். இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் நம் நாட்டுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது இலங்கை. பாதுகாப்பு, கடல்வழி வர்த்தகம் என, பல வகைகளில், இலங்கை நமக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
சீனாவின் உளவு கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள், இலங்கை துறைமுகங்களில் நிறுத்தப்படுவது நம் நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
கடந்த அக்டோபரில் தன்னை சந்தித்த நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம், இந்தியாவுக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கைக்கும் தங்களுடைய நிலப்பகுதியை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என, அனுரா குமார திசநாயகே உறுதி அளித்திருந்தார்.
இலங்கையில் நிதி நெருக்கடி ஏற்பட்டபோது, நம் நாடு உடனடியாக உதவிக்கரம் நீட்டியது. இலங்கையின் பொருளாதார சீரமைப்புக்கும் உதவி வருகிறது.
இலங்கை அதிபரின் இந்த பயணத்தின்போது இந்த விஷயங்கள் தொடர்பாக பேசப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இலங்கைவாழ் தமிழர்களுக்கான உரிமை தொடர்பாகவும் பேசப்படும்.
நம் நாட்டு மீனவர்கள், குறிப்பாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள், சர்வதேச கடல் எல்லையை மீறி மீன்பிடிப்பதாக, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர்.
இந்த கைது நடவடிக்கைகள் தற்போது மிகவும் அதிகமாக உள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக, இலங்கை அதிபருடன் விரிவாக பேசப்பட்டு, இந்த பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 141 இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையால் கைது செய்யப் பட்டு காவலில் உள்ளனர். இவர்களில், 45 பேர், விசாரணை கைதிகள். 96 பேர் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான, 198 படகுகள் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- நமது சிறப்பு நிருபர் -