பிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் சந்திப்பு: மீனவர் நலன் குறித்து ஆலோசனை
பிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் சந்திப்பு: மீனவர் நலன் குறித்து ஆலோசனை
ADDED : அக் 17, 2025 05:17 PM

புதுடில்லி: டில்லி வந்துள்ள இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா, மூன்று நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார். இதனைத் தொடர்ந்து அவர் 1991 - 94 வரை டில்லி பல்கலையின் கீழ் செயல்படும் ஹிந்து கல்லூரிக்கு சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
இந்நிலையில் இன்று ஹரிணி அமரசூரியா, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியாவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கல்வி, பெண்கள் முன்னேற்றம், புதுமையான கண்டுபிடிப்புகள், மீனவர் நலன் உள்ளிட்டவை குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. நெருங்கிய அண்டை நாடுகளாக நமது இரு நாட்டு மக்களின் வளர்ச்சிக்கும், பிராந்தியத்திற்கும் நமது ஒத்துழைப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வாறு அந்தப்பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.