ADDED : ஜன 12, 2024 11:19 PM

கோலார்: அயோத்தி ராமர் கோவில் விழா காரணமாக பா.ஜ., - காங்., இடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால் ராமர் மீது பக்தியுள்ள காங்கிரஸ் தலைவர்கள் தடுமாற்றத்தில் உள்ளனர்.
கோலார் மாவட்டத்தில் எம்.பி.,யாக 28 ஆண்டுகள் பதவியில் இருந்தவர், தற்போது கர்நாடக மாநில உணவுத் துறை அமைச்சராகவும் பதவியில் இருந்து வருபவர் கே.ஹெச்.முனியப்பா. இவர் ஆன்மிகவாதி.
அதிகாலை முதலே 'ஸ்ரீராம ஜெயம்' எழுதி வருகிறார். இதற்காக ஏற்கனவே நேரத்தை ஒதுக்கி உள்ளார். இந்நிலையில் லோக்சபா தேர்தல் குறித்து பேசுவதற்கு நேற்று முன்தினம் அவரை டில்லிக்கு வரும்படி காங்கிரஸ் மேலிடம் அழைத்துள்ளது. அதனால், அவசர அவசரமாக நேற்று முன்தினம் காலை விமானத்தில் பயணம் செய்ய நேரிட்டது.
விமானத்தில் இருக்கையில் அமர்ந்து ஸ்ரீ ராம ஜெயம் எழுதத் துவங்கி, டில்லியில் இறங்கும் வரை ஸ்ரீ ராம ஜெயம் எழுதிக் கொண்டே சென்றுள்ளார்.
இதனை படம் எடுத்து வாட்ஸாப் மூலம் வைரல் ஆக்கி உள்ளனர்.
காங்கிரசின் மூத்த தலைவரான கே.ஹெச். முனியப்பா, அயோத்தி ராமர் கோவில் திறப்பு பூஜையின், வி.ஐ.பி., பட்டியலில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.