கோவில் முன் இருந்த பேனர் அகற்றம் ஸ்ரீராமசேனை அமைப்பினர் எதிர்ப்பு
கோவில் முன் இருந்த பேனர் அகற்றம் ஸ்ரீராமசேனை அமைப்பினர் எதிர்ப்பு
ADDED : ஜன 08, 2024 10:58 PM
விஜயபுரா: விஜயபுராவில் சித்தேஸ்வரா கோவில் முன், முஸ்லிம்கள் கடை வைக்க அனுமதி இல்லை என்ற பேனரை, போலீசார் அப்புறப்படுத்தினர்.
பொங்கலை முன்னிட்டு, விஜயபுராவில் உள்ள சித்தேஸ்வரா கோவிலில் திருவிழா நடக்க உள்ளது. இக்கோவில் முன்புறம், ஸ்ரீராமசேனையைச் சேர்ந்தவர்கள், பேனர் ஒன்றை வைத்தனர்.
அதில், 'பசு இறைச்சி சாப்பிட்டு, ஹிந்துக்களின் நம்பிக்கையை புண்படுத்தும் நபர்கள், 'லவ் ஜிகாத்' என்ற பெயரில் நமது சகோதரிகளை ஏமாற்றுபவர்கள், நாட்டின் சட்டத்தை மதிக்காதவர்கள் கோவில் திருவிழாவின்போது எந்த வியாபாரமும் செய்ய அனுமதியில்லை' என குறிப்பிட்டிருந்தது.
இதை பார்த்த கோவில் நிர்வாகத்தினர், அதை அகற்ற முற்பட்டனர். அப்போது அவர்களுக்கும், ஸ்ரீராமசேனை அமைப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.
இது தொடர்பாக, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று அங்கு வந்த போலீசார், பேனரை அப்புறப்படுத்தினர்.
இதற்கு ஸ்ரீராமசேனை அமைப்பினர் ஆட்சேபனை தெரிவித்தனர். 'அடுத்த வாரம் கோவில் திருவிழாவின்போது, கோவிலின் வெளியே ஹிந்துக்கள் அல்லாதவர்கள் வியாபாரம் செய்ய அனுமதிக்க மாட்டோம்' என்று தெரிவித்தனர்.
இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.