ஸ்ரீ சத்யசாய் உயர்கல்வி நிறுவன பட்டமளிப்பு விழா; சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி சிபிஆர் பங்கேற்பு
ஸ்ரீ சத்யசாய் உயர்கல்வி நிறுவன பட்டமளிப்பு விழா; சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி சிபிஆர் பங்கேற்பு
UPDATED : நவ 22, 2025 06:36 PM
ADDED : நவ 22, 2025 04:47 PM

புட்டபர்த்தி: ஸ்ரீ சத்யசாய் உயர்கல்வி நிறுவன பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்று உரையாற்றினார்.
ஆந்திரா மாநிலம், புட்டபர்த்தியில், ஸ்ரீசத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் கடந்த நவ., 13ம் தேதி தொடங்கி, வரும் 24ம் தேதி வரை கோலாகலமாக நடக்கிறது. உலகின் 140 நாடுகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். இதையொட்டி, ஸ்ரீசத்ய சாய் உயர்கல்வி நிறுவனத்தின் 44வது பட்டமளிப்பு விழா, இன்று (நவ., 22) நடைபெற்றது.
பிரசாந்தி நிலையத்தில் உள்ள பூர்ணசந்திரா ஆடிட்டோரியத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில், துணைவேந்தர் பேராசிரியர் ராகவேந்திர பிரசாத் துவக்க உரை நிகழ்த்தினார். துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், தலைமை விருந்தினராக பங்கேற்றார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமைச்சர் நாரா லோகோஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இந்த விழாவில் இளங்கலை, முதுகலை, தொழில்நுட்பம் மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களுக்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பட்டங்களை வழங்கி உரையாற்றினார். அவர் பேசியதாவது: வரும் 2047ம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் முதல் பொருளாதார நாடாக மாறும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார். இதற்கு சத்ய சாய்பாபாவின் ஆசிர்வாதம் நிச்சயம் கிடைக்கும்.
பட்டம் பெற்ற மாணவர்கள் அர்ப்பணிப்புடன், ஒழுக்கமாக அமர்ந்திருப்பதை கண்டேன். இங்கு கடந்த நான்கு நாட்களில், நாட்டின் மிக முக்கிய மூன்று தலைவர்கள் வந்து இருக்கிறார்கள். சத்ய சாய்பாபாவின் ஆசிர்வாதம் சக்தி வாய்ந்தது.
சத்யசாய் கல்வி நிறுவனம் உயர்கல்வி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பது மறக்க முடியாத நாள். கல்வியில் மட்டுமல்ல சிறந்த ஒழுக்கம் கொண்டவர்களையும் இந்த சத்யசாய் கல்வி நிறுவனம் உருவாக்கி வருகிறது.
நாரா லோகேஷ் அனைவரும் அரசியலில் சேருமாறு கூறினார். நீங்கள் நாட்டின் சிறந்த தலைவராக எதிர்காலத்தில் மாற வேண்டும். எதிர்கால தலைவர்களே மாணவர்களாகிய நீங்கள் தான். குருக்கள், ஆசிரியர்களுக்கு தலை வணங்குகிறேன். இவ்வாறு சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.
மரியாதை
முன்னதாக பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் மஹா சமாதியில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

