ADDED : ஜன 06, 2024 07:11 AM

ஹுப்பள்ளி: ஹுப்பள்ளியில் 31 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஹிந்து அமைப்பு தொண்டர், ஸ்ரீகாந்த் பூஜாரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.
பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக, நாட்டின் பல பகுதிகளில் 1992 டிசம்பரில் பெரிய கலவரம் ஏற்பட்டது. கர்நாடக மாநிலம், ஹூப்பள்ளியிலும் கலவரம் நடந்தது. இந்த கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி, 300க்கும் மேற்பட்டோரின் பட்டியலை போலீசார் தயாரித்திருந்தனர்.
இதில், ஸ்ரீகாந்த் பூஜாரி, 50, என்பவரை, 31 ஆண்டுகளுக்கு பின், டிசம்பர் 29ல் கர்நாடக போலீசார் கைது செய்தனர். அவர் நீதிமன்ற காவலில் ஹுப்பள்ளி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
ஜாமின் கேட்டு, ஹுப்பள்ளியின் முதலாம் கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். நேற்று அவரது மனுவை விசாரித்த நீதிபதி, அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
நீதிமன்ற தீர்ப்பின் நகல், சிறை அதிகாரிக்கு நேற்று கிடைக்கவில்லை. ஸ்ரீகாந்த் பூஜாரி இன்று சிறையில் இருந்து வெளியே வருவார்.
இதற்கிடையில், பா.ஜ., மூத்த தலைவர் ராமசந்திரகவுடா, ராஜாஜிநகர் எம்.எல்.ஏ., சுரேஷ்குமார், மல்லேஸ்வரம் போலீஸ் நிலையம் முன்பும்; சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக், பா.ஜ., - எம்.பி., மோகன், கப்பன் பூங்கா போலீஸ் நிலையம் முன்பும், 'நானும் ராமர் பக்தர், கைது செய்யுங்கள்' என்று நேற்று போராட்டம் நடத்தினர்.