ADDED : மார் 08, 2024 02:21 AM

நட்புக்கு அடையாளம் என்றால், இவர்கள் தான் என்று சொல்லும் அளவுக்கு, பா.ஜ.,வில் முன்னாள் அமைச்சர்கள் ஸ்ரீராமுலு, ஜனார்த்தன ரெட்டி இருந்தனர். ஆனால் யார் கண்பட்டதோ தெரியவில்லை. கடந்த 2008ம் ஆண்டிற்கு பின், அவர்கள் உறவில் விரிசல் ஏற்பட்டது.
கனிம சுரங்க முறைகேடு வழக்கில் ஜனார்த்தன ரெட்டி சிறைக்கு சென்று, வெளியே வந்த பின்னர், ஸ்ரீராமுலு ஒதுங்க ஆரம்பித்தார்.
பா.ஜ.,வில் மீண்டும் ஜனார்த்தன ரெட்டி இணைய முயன்றபோது, அதற்காக உதவிகள் எதையும் ஸ்ரீராமுலு செய்யவில்லை.
இதனால் நண்பன் மீது ரெட்டி கோபம் அடைந்தார். கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு, 'கல்யாண ராஜ்ய பிரகதி' என்ற பெயரில், ஜனார்த்தன ரெட்டி கட்சி ஆரம்பித்தார்.
தன் கட்சிக்கு நண்பன் வருவார் என்று எதிர்பார்த்தார். இந்த விஷயத்திலும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நண்பனின் கட்சிக்கு வராததுடன், கட்சியை விமர்சனமும் செய்தார் ஸ்ரீராமுலு.
இந்நிலையில், தனிக் கட்சி ஆரம்பித்து, கொப்பால் கங்காவதியில் ஜனார்த்தன ரெட்டி வெற்றி பெற்றார். அதன் பின்னர் அவரது அருமை பா.ஜ.,வினருக்கு தெரிந்தது. கட்சியில் அவரை இணைக்க முயற்சி செய்து வருகின்றனர். ஸ்ரீராமுலுவுக்கும், நண்பனின் அருமை பெருமை தெரிந்ததால், மீண்டும் நண்பனுடன் நெருக்க முயற்சி செய்தார்.
“ஜனார்த்தன ரெட்டி இல்லாவிட்டால் நான் இல்லை; எனக்கு உணவு அளித்த கடவுள்,” என, ஸ்ரீராமுலு 'ஐஸ்' வைத்தார். தளபதி படத்தில் வரும் பாடல் வரியை போல 'என் நண்பன் போட்ட சோறு நிதமும் தின்னேன் பாரு, நட்பைக் கூட கற்பைப்போல எண்ணுவேன்' என்று சொல்லும் அளவுக்கு, ஸ்ரீராமுலு பேசினார். இதற்கும் காரணம் உள்ளது.
வரும் லோக்சபா தேர்தலில் பல்லாரி தொகுதியில், பா.ஜ., வேட்பாளராக ஸ்ரீராமுலு போட்டியிட முயற்சி செய்கிறார். பல்லாரியில் ஜனார்த்தன ரெட்டிக்கு தனி செல்வாக்கு உள்ளது. அவரது செல்வாக்கை வைத்து, எளிதில் வெற்றி பெறலாம் என்பது ஸ்ரீராமுலுவின் கனவாக இருந்தது. ஆனால் அதற்கு ஜனார்த்தன ரெட்டி ஆப்புவைத்து உள்ளார்.
“பல்லாரியில் எக்காரணம் கொண்டும் ஸ்ரீராமுலுவுக்கு சீட் தரக் கூடாது. அவரை தவிர யாருக்கு கொடுத்தாலும், என் ஆதரவு தருகிறேன்,” என, மாநில தலைவர் விஜயேந்திராவிடம் கறாராக கூறி இருக்கிறார். இதுபற்றி அறிந்த ஸ்ரீராமுலு, 'நீயா கூறியது' என ஜனார்த்தன ரெட்டியை நினைச்சு பாடிட்டு வர்றாராம்
- நமது நிருபர் -.

