ADDED : ஜன 24, 2025 07:01 AM

பெங்களூரு: ''தன் மாமாவின் கொலைக்கு பழிக்கு பழியாக கொலை செய்ய முயன்று ஸ்ரீராமுலு கொலைகாரன் ஆக பார்த்தார். ஆனால் அவருக்கு புத்திமதி கூறி இந்த அளவுக்கு வளர்த்து விட்டு தவறு செய்து விட்டேன்,'' என்று, ஜனார்த்தன ரெட்டி அதிரடி தகவலை வெளியிட்டுள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
லோக்சபா தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான், பா.ஜ.,வில் மீண்டும் இணைந்தேன். கனிம சுரங்க வழக்கில் பல்லாரி செல்ல எனக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து இருந்ததால், பல்லாரியை தவிர 18 தொகுதிகளில் பா.ஜ.,வுக்கு பிரசாரம் செய்தேன்.
பல்லாரி செல்ல எனக்கு அனுமதி கிடைத்த போது, சண்டூர் இடைத்தேர்தல் வந்தது. மேலிட தலைவர்கள் என்னிடம் பேசினர். யாருக்கு சீட் தர வேண்டும் என்று கேட்டனர். நீங்கள் யாருக்கு கொடுத்தாலும், அவரது வெற்றிக்கு உழைப்பேன் என்று கூறினேன். பங்காரு ஹனுமந்த்தை வேட்பாளராக தேர்வு செய்தது மேலிடம்; நான் இல்லை.
மேலிடம் கூறியதால் சண்டூரில் வீடு எடுத்து, பங்காரு ஹனுமந்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்தேன். வேட்புமனு தாக்கல் செய்து மூன்று நாட்களுக்கு பிறகு தான் ஸ்ரீராமுலு பிரசாரத்திற்கு வந்தார். முதல்வர் சித்தராமையா பல்லாரியில் முகாமிட்டு பிரசாரம் செய்தார். பணப்புழக்கம் அதிகமாக இருந்தது. இதனால் நமது வேட்பாளர் தோற்று போனார். ஸ்ரீராமுலு உட்பட எந்த தலைவர் மீதும் நான் புகார் செய்யவில்லை. என்னையும், ஸ்ரீராமுலுவையும் பற்றி பல்லாரி மக்களுக்கு நன்கு தெரியும்.
புத்திமதி
ஸ்ரீராமுலு மாமா ரயில்வே பாபு என்பவர், கடந்த 1991ல் கொலை செய்யபட்டார். அவரை கொலை செய்த கும்பல் ஸ்ரீராமுலுவையும் கொலை செய்ய கத்தி, கோடாரியுடன் சுற்றினர். எனது நண்பர்கள் சிலர், ஸ்ரீராமுலுவை காப்பாற்றும்படி என்னிடம் கேட்டனர். இதனால், அவரை என்னுடன் சேர்த்து கொண்டேன். என் அம்மா என்னிடம் ஸ்ரீராமுலுவை பாதுகாக்கும் பொறுப்பு, உன்னிடம் உள்ளது என்று கூறினார்.
ரயில்வே பாபுவை கொலை செய்தவர்களை பழிக்கு பழியாக கொல்வேன் என்று கூறிக்கொண்டு, ஸ்ரீராமுலு சுற்றினார். ஆனால், நான் அவருக்கு புத்திமதி கூறினேன். உனது வாழ்க்கையை வீணடித்து விடாதே என்று கூறி அவரை சமாதானம் செய்தேன். இல்லா விட்டால் கொலைகாரன் ஆகி இருப்பார். ஆனால், அவரது குடும்பத்தை அழிக்க, நான் முயற்சி செய்வதாக கூறி உள்ளார்.
வேதனை
கனிம சுரங்க வழக்கில் சிக்கிய பின், நான் 14 ஆண்டுகளாக பல்லாரியில் இல்லை. அனைத்தும் ஸ்ரீராமுலு கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனாலும் தேர்தல்களில் அவரால் வெற்றி பெற முடியவில்லை. என்னை மீண்டும் கட்சிக்கு அழைத்து வந்தது, கட்சி மேலிட தலைவர்கள் தான்.
சண்டூரில் முதல் முறை பா.ஜ., வெற்றி பெறும் சூழ்நிலை இருந்தது. ஆனால் பங்காரு ஹனுமந்த் வெற்றி பெற்றால், தன்னை விட பெரிய தலைவர் ஆகிவிடுவார் என்ற பயம் ஸ்ரீராமுலுவுக்கு ஏற்பட்டது. நான் அவரிடம் பேசினேன். நீ கட்சியின் மூத்த தலைவர். தனி செல்வாக்கு உள்ளது. உனக்கு எந்த விதத்திலும் அவமானம் ஏற்படாது என்றேன்.
ஸ்ரீராமுலு தனது அரசியல் வாழ்க்கையை துவங்கியது, காங்கிரசில் இருந்து தான். நான் தான் அவரை பா.ஜ.,வுக்கு அழைத்து வந்தேன். எடியூரப்பாவிடம் கூறி பல்லாரியில் சீட் வாங்கி கொடுத்தேன் கடந்த 2004ல் கூட்டணி அரசு வந்த போது, எடியூரப்பா என்னை அமைச்சராக பதவி ஏற்கும்படி கூறினார். ஆனால், ஸ்ரீராமுலுவுக்கு அமைச்சர் பதவி கொடுக்க சொன்னேன்.
தற்போது வால்மீகி சமூக தலைவரான அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, துணை முதல்வர் சிவகுமார் இடையில் மோதல் நடக்கிறது. சதீஷ் அதிகாரத்தை குறைக்க, ஸ்ரீராமுலுவை, சிவகுமார் காங்கிரசுக்கு அழைத்து சென்றாலும் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. சுமாார் 40 ஆண்டுகள் ஸ்ரீராமுலுவின் அரசியல் வளர்ச்சிக்கு உதவி செய்து உள்ளேன். அதை எல்லாம் அவர் மறந்து பேசியது வேதனை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

