ஆட்டம் கண்ட மேடை: பீஹார் பிரசாரத்தில் ராகுல் அதிர்ச்சி
ஆட்டம் கண்ட மேடை: பீஹார் பிரசாரத்தில் ராகுல் அதிர்ச்சி
UPDATED : மே 27, 2024 06:12 PM
ADDED : மே 27, 2024 04:55 PM

பாட்னா: பீஹாரில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் பங்கேற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தின்போது, மேடை திடீரென ஆட்டம் கண்டதுடன், சிறிது கீழே சரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராகுலை, மேடையில் இருந்தவர்கள் தாங்கிப்பிடித்தனர். நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பீஹார் மாநிலம் பாலிகஞ்ச் பகுதியில் இண்டியா கூட்டணி சார்பில் தேர்தல் பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் மற்றும் மற்ற இண்டியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்களும் பங்கேற்றனர். ராகுல் மேடையில் ஏறி தொண்டர்களிடம் கையை அசைத்தவாறு நடந்து சென்றார்.
அப்போது திடீரென மேடையின் ஒரு பகுதி உடைந்ததால், சிறிதளவு கீழே சரிந்தது. இதில் மேடை ஆட்டம் கண்டது. மேடையில் இருந்த ராகுல் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் தடுமாறினர். உடனே சுதாரித்துக்கொண்ட மற்றவர்கள் ராகுலை தாங்கிப்பிடித்தனர். நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

