UPDATED : செப் 27, 2024 11:50 PM
ADDED : செப் 27, 2024 11:45 PM

டில்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கும், பள்ளி கல்வித் துறைக்கும், மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
டில்லியில் நேற்று காலை 11:00 மணிக்கு, பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். 40 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்பில், தமிழக கோரிக்கைகள் தொடர்பாக முதல்வர் வலியுறுத்தினார்; அந்த விபரங்கள் அடங்கிய மனுவையும் பிரதமரிடம் அளித்தார். தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக உருவாக்கப்பட்ட, 'தடம்' பெட்டகத்தையும் பிரதமருக்கு பரிசாக வழங்கினார்.
பிரதமருடனான சந்திப்பு முடிந்ததும், முதல்வர் அளித்த பேட்டி:
இனிய சந்திப்பாக இருந்தது. இதை பயனுள்ள சந்திப்பாக மாற்றுவது, பிரதமரின் கைகளில் தான் உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்ட பணிகளை போல, இரண்டாம் கட்ட பணிகளை, மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிறைவேற்ற வேண்டும்.
மத்திய அரசு நிதி ஒதுக்காததால் பணிகள் தொய்வடைந்துள்ளன. மத்திய அரசு விரைவாக நிதி ஒதுக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில், மத்திய அரசு 2,152 கோடி ரூபாய் வழங்க வேண்டும். இதில், முதல் தவணை இன்னும் வழங்கப்படவில்லை.
இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், தமிழக அரசு கையெழுத்து போடாததால், நிதி வழங்கப்படாமல் உள்ளது.
தேசிய கல்வி கொள்கையில் உள்ள, பல நல்ல விஷயங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதிலுள்ள மும்மொழி கொள்கையை ஒப்புக்கொள்ள தயாராக இல்லை. எனவே, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் திருத்தப்பட வேண்டும் என்று சொல்லி வருகிறோம்.
நிதி தராததால், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை; மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்னைகளையும் சொல்லியுள்ளோம். பாரம்பரிய மீன்பிடி பகுதிகளுக்கு மீன் பிடிக்கப் போகும் மீனவர் பிரச்னைக்கு, அடுத்த மாதம் கொழும்பில் நடக்கும் இரு நாடுகளின் கூட்டுக்குழு கூட்டத்தில் தீர்வு காண வேண்டும். இலங்கை புதிய அதிபரிடமும் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிரதமரிடம் கேட்டுக் கொண்டேன்.
இவ்வாறு முதல்வர் கூறினார்.
பின், செய்தியாளர்கள் கேள்விகளுக்கு, முதல்வர் அளித்த பதில்:
சந்திப்பின் போது, பிரதமர் மோடியின் அணுகுமுறை எவ்வாறு இருந்தது?
அவர் பிரதமராக சந்தித்தார். நான் முதல்வராக சந்தித்தேன்; அவ்வளவு தான். நான் கூறியதை பொறுமையாக கேட்டார். சந்திப்புக்கு, 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. நாங்கள், 40 நிமிடங்கள் பேசினோம். இதிலிருந்து சந்திப்பு எப்படி இருந்திருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
தமிழகத்தில் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை எழுந்துள்ளதே?
யார் கேட்டனரோ, அவர்களே விளக்கம் தந்து விட்டனர். ஊடகங்கள் தான் வேண்டுமென்றே திசை திருப்பி பெரிதுபடுத்துகின்றன.ஆட்சியில் பங்கு கேட்பதை, தங்கள் கட்சியின் கொள்கை என்று திருமா கூறுகிறாரே?
அது கொள்கையாக இருக்கலாம். தொடர்ந்து சொல்லப்பட்டு கொண்டிருப்பது தான். புதிதாக ஒன்றும் சொல்லவில்லை.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றனரே?
பிரதமரிடம் அளித்த மனுவில் விளக்கி உள்ளோம். அமைச்சர் ஜெய்சங்கரிடமும் பேசியுள்ளோம். இலங்கையின் புதிய அதிபரிடம் பேசும்படி கூறியுள்ளோம். பிரதமரும் கலந்து பேசி கூறுவதாக தெரிவித்துள்ளார்.
கச்சத் தீவை தி.மு.க., தாரைவார்த்தது தான் மீனவர் பிரச்னைக்கு காரணமா?
தவறான கருத்தை கூற வேண்டாம். கச்சத் தீவை தருவதற்கு தி.மு.க., எதிர்ப்பு தெரிவித்தது. திரும்ப திரும்ப தவறான தகவலை பரப்ப வேண்டாம். கருணாநிதி எதிர்த்து பேசியுள்ளார். சட்டசபையிலும் பதிவுகள் உள்ளன. சட்டசபையில் தீர்மானமே போட்டுள்ளோம்.
செந்தில் பாலாஜி ஜாமினில் வெளி வந்துஉள்ளது குறித்து?
துணிச்சலோடு அவர் இருந்துள்ளார். அவரது துணிவை பாராட்டுகிறோம். கோர்ட்டில் போராடி, வழக்கில் இருந்து விடுதலை பெறுவார் என நம்பிக்கை உள்ளது; அவரும் நம்புகிறார்.
மகிழ்ச்சியாக சந்திப்பு நடந்தது என்கிறீர்கள். மத்திய அரசின் செயல்பாடு அவ்வாறு உள்ளதா; தமிழகத்தின் உரிமைகள் காக்கப்படுகிறதா?
நாங்கள் அவ்வப்போது எங்கள் கொள்கைகளை விட்டுத் தராமல், கோரிக்கைகளை சொல்லி வருகிறோம். கொள்கைகளை விட்டுத் தருவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
இவ்வாறு ஸ்டாலின் பதில் அளித்தார்.
-- நமது டில்லி நிருபர் -