தேஜ கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் மாநில வளர்ச்சி வேகம் அடையும்: பீஹார் பிரசாரத்தில் மோடி உறுதி
தேஜ கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் மாநில வளர்ச்சி வேகம் அடையும்: பீஹார் பிரசாரத்தில் மோடி உறுதி
UPDATED : அக் 24, 2025 01:45 PM
ADDED : அக் 24, 2025 01:26 PM

பாட்னா: ''பீஹார் மாநிலத்தில் மீண்டும் தேஜ கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் மாநிலத்தின் வளர்ச்சி வேகம் அடையும்'' என தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
பீஹாரில் 243 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 6 மற்றும் 11ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நவ., 14ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இத்தேர்தலில் பா.ஜ., மற்றும் காங்., கூட்டணிகள் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் இன்று (அக் 24) ஆளும் தேஜ கூட்டணியின் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்கினார். சமஸ்திபூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பாரத ரத்னா விருது பெற்ற கர்பூரி தாக்கூர் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார். எங்களுக்கு உத்வேகம் அளித்தார்.
அரசியலமைப்பு சட்டத்தின் நகலை கையில் வைத்திருப்பவர்கள் மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள். ஆர்.ஜே.டி மற்றும் காங்கிரஸ் மோசடிகளில் ஈடுபட்டன. அவர்களின் தலைவர்கள் ஜாமினில் வெளியே வந்தனர். கர்பூரி தாக்கூரின் விருதை திருட முயற்சி செய்தனர். பீஹார் மக்கள் காட்டு ராஜ்ஜியத்தை புறம் தள்ளிவிட்டு, நல்லாட்சிக்கு ஓட்டளிக்க வேண்டும்.
பீஹார் மாநிலத்தில் மீண்டும் தேஜ கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் மாநிலத்தின் வளர்ச்சி வேகம் அடையும்.
நிதிஷ் குமார் தலைமையில், தேஜ கூட்டணி இந்த முறை பீஹாரில் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் இருந்த போது ஒதுக்கப்பட்ட நிதியை விட பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பீஹாருக்கு மூன்று மடங்கு அதிக நிதியை வழங்கியது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
கர்ப்பூரி தாக்கூர் குடும்பத்தினருடன் உரையாடிய மோடி
முன்னதாக, சமஸ்திபூருக்கு வந்த பிரதமர் மோடி பீஹார் முன்னாள் முதல்வரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான கர்ப்பூரி தாக்கூர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்தினருடன் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ் குமார் உடன் இருந்தார்.

