மத்திய அரசு திட்டத்தை முடக்கும் மாநில அரசுகள்; பிரதமர் வேதனை!
மத்திய அரசு திட்டத்தை முடக்கும் மாநில அரசுகள்; பிரதமர் வேதனை!
ADDED : அக் 29, 2024 08:39 PM

புதுடில்லி: :'மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை, அரசியல் லாபத்தை மட்டுமே எண்ணி, டில்லி, மேற்கு வங்க மாநில அரசுகள் ஏற்க மறுத்துள்ளன. இதனால், இத்திட்டத்தின் உண்மையான பயன்களை இந்த இரண்டு மாநில மக்களும் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. இதற்காக அவர்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன்,'என பிரதமர் மோடி உருக்கமாக பேசினார்.
தன்வந்தரி ஜெயந்தி மற்றும் 9வது ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு புதுடில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில், ஆயுஷ்மான் பாரத் திட்டம் உள்ளிட்ட ரூ.12,850 கோடி மதிப்புள்ள சுகாதாரத் துறை தொடர்பான பல்வேறு திட்டங்களை பிரதமர் இன்று (அக். 29) தொடங்கி வைத்தார்.
சுகாதார திட்ட துவக்க விழாவில் அவர் பேசியதாவது:
நாட்டில் பொருளாதார ரீதியாக பின் தங்கி இருப்பவர்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு, 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் சுகாதார பாதுகாப்பை விரிவுபடுத்தும் நோக்கில் ஆயஷ்மான் பாரத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டமாக,செயல்படுத்தி வருகிறது மத்திய அரசு.
இந்த திட்டத்தை பயன்களை, டில்லி மக்களும், மேற்கு வங்க மக்களும் அனுபவிக்க முடியாத வகையில் இரு மாநில அரசுகளும் முடக்கி விட்டன. அந்த மாநில மக்களுக்கு என்னால் உதவ முடியவில்லையே என்ற கவலையும், வேதனையும் என் மனதில் ஏற்பட்டுள்ளது. உதவ முடியாத நிலைக்காக நான் அந்த மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.