மகளிர் உரிமை தொகைக்காக மாநில அரசுகளின் செலவு ரூ.1.68 லட்சம் கோடி!
மகளிர் உரிமை தொகைக்காக மாநில அரசுகளின் செலவு ரூ.1.68 லட்சம் கோடி!
ADDED : நவ 06, 2025 03:39 AM

புதுடில்லி: நம் நாட்டில் மூன்று ஆண்டுகளுக்கு முன், மகளிர் உரிமைத்தொகை போன்ற நலத் திட்டங்களுக்கு இரு மாநிலங்கள் மட்டுமே செலவழித்த நிலையில், தற்போது 12 மாநிலங்களில் அத்தகைய திட்டம் விரிவடைந்து இருக்கிறது.
இதன் மூலம் ஆண்டுக்கு 12 மாநிலங்களும், 1.68 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு செலவழிப்பதாக பி.ஆர்.எஸ்., சட்டசபை ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த செலவினங்களால் ஆறு மாநிலங்களில் இந்த ஆண்டு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. நாடு முழுதும் உள்ள பெண் வாக்காளர்களை கவருவதற்காக, பிரத்யேக திட்டங்களை ஒவ்வொரு தேர்தலின்போதும் அரசியல் கட்சிகள் வாக்குறுதியாக அள்ளி விடுகின்றன.
அந்த வகையில் தமிழகத்தில் தி.மு.க., தேர்தல் வாக்குறுதியாக தகுதியுள்ள மகளிருக்கு மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்தது. தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், இந்த வாக்குறுதியை ஒவ்வொரு கட்டங்களாக நிறைவேற்றி வருகிறது.
12 மாநிலங்கள் அதே போல், மத்திய பிரதேசம், கர்நாடகா, மஹாராஷ்டிரா உட்பட தற்போது 12 மாநிலங்களில் மகளிரை மையப்படுத்தி நிபந்தனையற்ற பணப் பரிவர்த்தனை திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம், 12 மாநிலங்களுக்கும் சேர்த்து ஆண்டுக்கு, 1.68 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நிதிச் சுமை ஏற்படுவதாக பி.ஆர்.எஸ்., சட்டசபை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2022 - 23 வரை மகளிரை மையப்படுத்தி நிபந்தனையற்ற பணப் பரிவர்த்தனை திட்டம் இரு மாநிலங்களில் மட்டுமே அமலில் இருந்தது. தற்போது, 2025-26ல் இத்தகைய திட்டங்கள் 12 மாநிலங்களுக்கு விரிவடைந்து இருக்கின்றன.
வருவாய், வயது உள்ளிட்ட காரணிகள் அடிப்படையில் இத்தகைய திட்டங்களுக்கு முதன்மை யான பயனாளிகள் கண்டறியப்படுகின்றனர்.
அந்த வகையில் அசாம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள், மகளிருக்கான நிபந்தனையற்ற பணப் பரிவர்த்தனை திட்டத்துக்கான தொகை ஒதுக்கீட்டை கணிசமாக அதிகப்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அசாமில், 31 சதவீதமும், மேற்கு வங்கத்தில் 15 சதவீதமும் பயனாளிகளுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரித்துள்ளது.
நிதிச்சுமை இந்த திட்டங்களால் மாநில அரசுகளின் பட்ஜெட்டில் கடும் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மகளிருக்கான திட்டங்களை செயல்படுத்திய, 12 மாநிலங்களில், தற்போது ஆறு மாநிலங்கள் நிதி நெருக்கடியால் தத்தளித்து வருகின்றன.
உதாரணமாக கர்நாடக அரசின் மொத்த வருவாயில் இருந்து மகளிர் திட்டங்களுக்கான செலவினங்களை விலக்கினால், அதன் வருவாய் பற்றாக்குறை 0.6 சதவீதத்தில் இருந்து குறைந்து 0.3 சதவீத உபரி வருவாயாக மேம்படும். அதே போல் மத்திய பிரதேசத்தின் உபரியும் 0.4 சதவீதத்தில் இருந்து 1.1 சதவீதமாக மேம்படும்.
இந்த நிதிச் சுமைகளை கருத்தில் கொண்டு ஒரு சில மாநிலங்கள் மகளிர் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் செலவினங்களை குறைத்து வருகின்றன. சமீபத்தில் கூட மஹாராஷ்டிரா அரசு இந்த செலவினங்களை குறைக்க நடவடிக்கை எடுத்தது. ஆனால், ஜார்க்கண்ட் அரசோ மாதாந்திர கொடுப்பனவுகளை உயர்த்தியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கான மானியத் தொகை செலவினங்களை உயர்த்திக் கொண்டே செல்வது, பயன் உள்ள திட்டங்களுக்கு செலவு செய்ய முடியாத சூழலை ஏற்படுத்தி விடும் என ரிசர்வ் வங்கியும் சமீபத்தில் எச்சரித்திருந்தது.

