ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து; மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து; மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
ADDED : ஆக 14, 2025 01:36 PM

புதுடில்லி: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து 8 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ, கடந்த 2019 ஆக., 5ல் மத்திய பா.ஜ., அரசு ரத்து செய்தது. இதையடுத்து அம்மாநிலம், ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதில், சட்ட சபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு - காஷ்மீர் பிரிக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கில், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த உச்சநீதிமன்றம், விரைவில் சட்டசபைக்கு தேர்தல் நடத்தி, ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க பரிந்துரை செய்தது. ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்பட்டு, உமர் அப்துல்லா முதல்வராக உள்ளார். ஆனால் இன்னமும் மாநில அந்தஸ்து வழங்கப்படவில்லை.
இந்த சூழலில், ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் பிஆர் கவாய் மற்றும் கே வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை நினைவில் கொள்ள வேண்டும். கள எதார்த்தத்தை புறக்கணிக்க முடியாது. அதை கருத்து கொள்ள வேண்டும், என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக 8 வாரத்திற்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.