காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து: பிரதமர் மோடி
காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து: பிரதமர் மோடி
ADDED : ஏப் 12, 2024 12:46 PM

உதம்பூர்: ‛‛ காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும்; சட்டசபை தேர்தல் நடக்கும்''. என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
டிரைலர்
காஷ்மீரின் உதம்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: இது எம்.பி.,க்களை மட்டும் தேர்வு செய்யும் சாதாரண தேர்தல் கிடையாது. வலிமையான அரசு அமைவதற்கான தேர்தல். அரசு வலிமையாக இருக்கும் போது, சவால்களை சவாலுக்கு உட்படுத்தி பணிகளை முடிக்கும். காஷ்மீரில் தற்போது நடந்திருப்பது வெறும் டிரைலர் தான். புதிய காஷ்மீரை கட்டமைக்கும் பணியில் மும்முரமாக உள்ளேன். இங்கு சட்டசபை தேர்தல் நடக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை. விரைவில், காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.
ராமர் கோயில்
ராமர் கோயில், பா.ஜ.,விற்கு தேர்தல் விவகாரம் என காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. ராமர் கோயில் எப்போதும் தேர்தல் விஷயம் இல்லை. அப்படி இருந்ததும் இல்லை. பா.ஜ., தோன்றுவதற்கு முன்னரே ராமர் கோயிலுக்காக போராட்டம் நடந்தது. வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்கள் நமது கோயிலை அழித்த போது, மக்கள் தங்களது வழிபாட்டு தலங்களை பாதுகாக்க போராடினர். பங்களாக்களில் வசிக்கும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள், ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை புறக்கணித்தனர்.
இழிவுபடுத்தி வீடியோ
நாட்டின் பெரும்பான்மை மக்களின் உணர்வுகள் பற்றி காங்கிரஸ் மற்றும் ‛இண்டியா' கூட்டணி கவலைப்படுவது இல்லை. மக்களின் உணர்வுகளோடு விளையாடுவதில் அவர்கள் மகிழ்கின்றனர். நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டு, ஜாமினில் வெளியே வந்துள்ள நபர், கிரிமினல் வீட்டிற்கு சென்று ஹிந்துக்கள் விரதம் மேற்க்கொள்ளும் மாதத்தில் இறைச்சி சாப்பிட்டு வீடியோ வெளியிட்டு உள்ளார். யாரும் எதையும் சாப்பிடுவதை சட்டம் தடுக்கவில்லை. ஆனால் இவர்களின் ஏதோ ஒரு நோக்கத்திற்காக இதனை செய்கின்றனர். முகலாயர்கள், கோயிலை இடித்ததுடன் திருப்தி அடையவில்லை. அவர்களைப் போல் இவர்களும், விரத நாட்களில் மக்களை இழிவுபடுத்தி வீடியோ வெளியிடுகின்றனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
