வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு தயாராகும்படி மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு தயாராகும்படி மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்
ADDED : செப் 22, 2025 12:02 AM

புதுடில்லி: நாடு முழுதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணியை மேற்கொள்ள, வரும் 30ம் தேதிக்குள் தயாராக இருக்கும்படி, அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதை முன்னிட்டு, கடந்த ஜூனில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணி நடந்தது.
இதற்கு காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பீஹாரில் சிறப்பு தீவிர திருத்த பணியின் போது, 65 லட்சம் போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டு நீக்கப் பட்டனர்.
இதைத் தொடர்ந்து, நாடு முழுதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணியை மேற்கொள்வது தொடர்பாக, இம்மாத துவக்கத்தில், டில்லியில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது, கடைசியாக நடந்த சிறப்பு திருத்த பணிக்கு பின் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை தயாராக வைத்திருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், நாடு முழுதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணியை மேற்கொள்ள, வரும் 30ம் தேதிக்குள் தயாராக இருக்கும்படி அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
இதனால் இந்த மாநிலங்களில், விரைவில் சிறப்பு திருத்த பணி நடக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, மற்ற மாநிலங்களிலும் விரிவுபடுத்தப்படும் என, தெரிகிறது.