காங்கிரசிடம் இருந்து விலகி இருங்க: தலித் தலைவர்களுக்கு மாயாவதி அறிவுரை
காங்கிரசிடம் இருந்து விலகி இருங்க: தலித் தலைவர்களுக்கு மாயாவதி அறிவுரை
UPDATED : செப் 23, 2024 10:35 PM
ADDED : செப் 23, 2024 08:14 PM

லக்னோ: '' இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் காங்கிரஸ் மற்றும் ஜாதிக்கட்சிகளிடம் இருந்து விலகி இருங்கள்,'' என ஹரியானாவை சேர்ந்த தாழ்த்தப்ப்டட தலைவர்களுக்கு மாயாவதி அறிவுரை வழங்கி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாட்டில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட துவங்கி உள்ளன. கடினமான நேரத்தில் மட்டுமே தலித்களை காங்கிரஸ் மற்றும் மற்ற ஜாதிக்கட்சிகள் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும். ஆனால், நல்ல நாட்களில் அவர்களை புறக்கணிக்கும். அவர்களுக்கு பதில் ஜாதிய தலைவர்களை தான் நியமிக்கும். முக்கியமாக ஹரியானா மாநிலத்தில் இது நடக்கும்.
அவமானப்படுத்தப்பட்ட தலைவர்கள் அனைவரும் அம்பேத்கரிடம் இருந்து பாடம் படிக்க வேண்டும். அவரை முன் மாதிரியாக கொண்டு, அடக்கு முறைக்கு எதிராக பேச அனுமதிக்கப்படாததால் சுயமரியாதையை கருத்தில் கொண்டு ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்தேன்.
காங்கிரஸ் மற்றும் மற்ற ஜாதிக்கட்சிகள் ஆரம்பம் முதல் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவே உள்ளன. அமெரிக்கா சென்றிருந்த ராகுல், இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பேசினார். அரசியல்சாசனம், இட ஒதுக்கீடு மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் ஓ.பி.சி.,க்களுக்கு எதிரான கட்சிகளிடம் இருந்து தள்ளி இருங்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் மாயாவதி கூறியுள்ளார்.