விமானத்தில் பறந்து பறந்து திருடி சொந்த கார், ‛பிளாட்' என சொகுசு வாழ்க்கை: பலே திருடன் கைது
விமானத்தில் பறந்து பறந்து திருடி சொந்த கார், ‛பிளாட்' என சொகுசு வாழ்க்கை: பலே திருடன் கைது
ADDED : ஜூலை 06, 2024 03:42 PM

ஆமதாபாத்: ரூ.1 லட்சம் திருட்டு தொடர்பான வழக்கில் கைதான திருடன், மும்பையில் சொந்தமாக ‛ பிளாட்' வாங்கி குடியிருந்ததும், ‛ ஆடி ' கார் வைத்திருப்பதுடன் விமானத்தில் சென்று பல்வேறு மாநிலங்களில் திருட்டில் ஈடுபட்டதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது
குஜராத் மாநிலம் வாபி நகரில் ரூ.1 லட்சம் திருட்டு தொடர்பான வழக்கை விசாரித்த வால்சாத் போலீசார், மும்பையில் வசிக்கும் கனுபாய் சோலங்கி என்பவரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
19 வழக்குகள்
இது தொடர்பாக போலீசார் கூறியதாவது: கனுபாய் சோலங்கி, மஹாராஷ்டிர மாநிலம் மும்பையின் மும்ப்ரா பகுதியில் ரூ.1 கோடி மதிப்புள்ள வீட்டில் வசித்து வருகிறார். அவரிடம் ‛ ஆடி ' கார் ஒன்றும் உள்ளது. குஜராத் மட்டுமல்லாமல், தெலுங்கானா, ஆந்திரா, ம.பி., மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் திருட்டுகளில் ஈடுபட்டு உள்ளார். 19 திருட்டு வழக்குகள் அவர் மீது உள்ளன. முஸ்லிம் மதத்தை சேர்ந்த பெண் ஒருவரை, தனது பெயரை மாற்றி சொல்லி திருமணம் செய்துள்ளார்.
போதைக்கு அடிமை
வெளிமாநிலங்களுக்கு திருட்டில் ஈடுபட செல்லும் சோலங்கி, அங்கு செல்வதற்கு விமானத்தில் பயணித்துள்ளார். அந்த மாநிலங்களில் சொகுசு ஓட்டலில் தங்கும் அவர், ஓட்டல் கார் மூலம் பயணித்துள்ளார். திருட்டில் ஈடுபடுவதற்கு முன் பகல் நேரங்களில், சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று உளவு பார்த்து வந்துள்ளார். மும்பையில் இரவு நேர விடுதிகள், நடன விடுதிகளில் இரவு பொழுதை செலவிட்ட சோலங்கி, போதைக்கு அடிமை ஆகி உள்ளார். இதற்காக மாதம் ரூ.1.50 லட்சம் செலவு செய்துள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.