பங்குச்சந்தையில் முதலீடு: 'டாப் 5' மாநிலங்கள் எவை தெரியுமா?
பங்குச்சந்தையில் முதலீடு: 'டாப் 5' மாநிலங்கள் எவை தெரியுமா?
UPDATED : செப் 28, 2024 03:05 PM
ADDED : செப் 28, 2024 02:06 PM

புதுடில்லி: இந்திய பங்குச்சந்தைகள் நாளுக்கு நாள் உயர்வை சந்தித்து வரும் நிலையில், உ.பி., ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் முதலீடு செய்துள்ளதாக தேசிய பங்குச்சந்தை (என்எஸ்இ) கூறியுள்ளது.
இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த மாதம், பங்குச்சந்தையில் பதிவு செய்த முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டி சாதனை படைத்து உள்ளது. முதலீடு செய்பவர்களில் அதிகம் பேர் மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர்.
இந்நிலையில், என்எஸ்இ வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியுள்ளதாவது: பங்குச்சந்தையில் பதிவு செய்த முதலீட்டாளர்களின் எண்ணிக்கையில் மஹாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 1.7 கோடி முதலீட்டாளர்கள் உள்ளனர். இது மொத்த எண்ணிக்கையில் 16.8 சதவீதம் ஆகும்.
இரண்டாவது இடத்தில் 1.1 கோடி பேருடன்(11.1%) உ.பி.,யும்
3வது இடத்தில் 88.5 லட்சம் பேருடன்(8.7 %) குஜராத்தும்
4வது இடத்தில் 59 லட்சம் பேருடன் ( 5.8 சதவீதம்) மேற்கு வங்கமும்
5வது இடத்தில் 57.8 லட்சம் பேருடன் (5.7 %) சதவீதம் ராஜஸ்தானும் உள்ளது.
பங்குச்சந்தை முதலீடு செய்துள்ளவர்களில் 4 ல் ஒருவர் உ.பி., ராஜஸ்தான், மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்களாக தான் இருப்பார்கள். மொத்த முதலீட்டாளர்களில் 48 சதவீதம் பேர் மஹாராஷ்டிரா, உ.பி., குஜராத், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள்.
வட மற்றும் கிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள், பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர். இவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.