ADDED : அக் 16, 2024 10:20 PM

கர்நாடகாவில் பாயும் கிருஷ்ணா, துங்கா நதிகளின் நடுவே அமைந்துள்ளது ராய்ச்சூர். இம்மாவட்டம் வரலாற்று சிறப்பு மிக்க மாவட்டமாகும். வரலாற்று அடையாளங்களை இன்றைக்கும் காணலாம்.
ராய்ச்சூரின் தென் திசையில் 10 கி.மீ., இடைவெளியில் புராதனமான மலியாமாத் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் பழம் பெரும் கோட்டைகள், கோவில்கள், கல்வெட்டுகள், நாக சிற்பங்கள் உள்ளன. அடர்ந்த வனம், மலைகள், குன்றுகள் சூழ்ந்துள்ளன. வனத்தில் பல்வேறு விலங்குகள், பறவைகள் அடைக்கலம் பெற்றுள்ளன. மலையில் ராமேஸ்வரர் கோவில், கோசாலை அமைந்துள்ளன.
ராய்ச்சூர் நகரின் இதய பகுதியான தீன் கந்தில் சதுக்கத்தில், வரலாற்று பிரசித்தி பெற்ற கற்களால் செதுக்கப்பட்ட ஒரு பெரிய யானை, இரண்டு குட்டி யானைகளை காணலாம். மலியாபாத் கிராமத்திலும் கல் யானைகள் உள்ளன. 4 அடி உயரம், 4 அடி அகலம் கொண்ட கல் யானைகள், சுற்றுலா பயணியரை சுண்டி இழுக்கின்றன. இவற்றின் கழுத்தில் செயின், பூமாலைகள், மணி, கால்களில் சலங்கைகள் என, சர்வ அலங்காரங்களும் கொண்டு, கலைஞர்கள் நுணுக்கமாக செதுக்கி உள்ளனர். இவர்களின் கை வண்ணம், கலைநயம் கல் யானைகளின் அழகை மெருகேற்றியுள்ளது.
திறந்த வெளியில் வெயில், மழை, காற்றுக்கு ஈடு கொடுத்து நின்றுள்ளன. கல் யானைகளின் பக்கத்தில் ஏதோ கட்டடம் இடிந்த நிலையில் தென்படுகிறது. இது விஷ்ணு கோவிலாக இருக்கலாம் என, வரலாற்று வல்லுனர்கள் கூறுகின்றனர். கோவிலின் முன்பாக, படிகளின் இரண்டு ஓரங்களில், இத்தகைய கலைநயம் மிக்க கல் யானைகள் செதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வரலாற்று சின்னமாகவும் விளங்குகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணியர், கலை நயம் கொண்டு செதுக்கப்பட்ட கல் யானைகளை பற்றி ஆவலுடன் கேட்டு தெரிந்து கொள்கின்றனர். யானைகள் அருகில் நின்று போட்டோ, வீடியோ எடுக்கின்றனர். மலியாபாத்தில் இதுபோன்ற பல்வேறு வரலாற்று சின்னங்கள், இலைமறை காயாக இருக்கும். இவற்றை ஆய்வு செய்யும்படி வரலாற்று வல்லுனர்கள் அறிவுறுத்துகின்றனர்.
வரலாற்று கல் யானைகளை காண, ராய்ச்சூருக்கு சென்று, அங்கிருந்து பஸ்சிலோ அல்லது தனியார் வாகனத்திலோ மலியாபாத் கிராமத்துக்கு வரலாம்.
- நமது நிருபர் -