கலெக்டர் கார் மீது கல்வீசி தாக்குதல்: தெலுங்கானாவில் பதற்றம்
கலெக்டர் கார் மீது கல்வீசி தாக்குதல்: தெலுங்கானாவில் பதற்றம்
ADDED : நவ 11, 2024 05:48 PM

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தின் விகராபாத் மாவட்டத்தில் பேச்சு நடத்த வந்த கலெக்டர் கார் மீது கிராமவாசிகள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதி கலவர பூமியாக மாறியது.
தெலுங்கானா அரசு, லஹ்சர்லா என்ற கிராமத்தில் மருந்து பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தை அமைக்க திட்டம் வகுத்துள்ளது. அது குறித்து, சில நாட்களாக, ஹக்கிம்பேட்டை, போலேபள்ளி, ஆர்.பி. தண்டா, புலிச்செர்லா, எர்லாபள்ளிதண்டா கிராமங்களில் வசிக்கும் மக்களிடம் அரசு அதிகாரிகள் பேச்சு நடத்தி வந்தனர்.
மருந்து பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் இங்கு அமைக்கப்பட்டால், விவசாயம் அழிந்து விடும். வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கருதிய அப்பகுதி கிராமத்தினர், அரசு அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 'வெளியே செல் மருந்து நிறுவனமே' என்று பேனர்கள் வைத்து போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று மாவட்ட கலெக்டர் பிரதீக் ஜெய்ன், கிராம மக்களுடன் பேச்சு நடத்த அதிகாரிகளுடன் காரில் வந்தார். அப்போது அங்கிருந்த கிராம மக்கள் கார் மீது கற்களை வீசி பலமாக தாக்கினர்.
கொடங்கல் பகுதி வளர்ச்சி அமைப்பு அதிகாரி வெங்கட் ரெட்டியை தாக்கியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. அந்த மாவட்டத்துக்கு கூடுதல் போலீஸ் படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.