பா.ஜ., பிரசாரத்தில் கல்வீச்சு: முன்னாள் எம்.பி., மீது தாக்குதல்
பா.ஜ., பிரசாரத்தில் கல்வீச்சு: முன்னாள் எம்.பி., மீது தாக்குதல்
ADDED : நவ 17, 2024 11:53 PM

அமராவதி: மஹாராஷ்டிராவில் பா.ஜ., தேர்தல் பிரசாரத்தில் மோதல் ஏற்பட்டதையடுத்து, அக்கட்சியின் முன்னாள் எம்.பி., நவ்நீத் கவுர் ராணா மீது நாற்காலிகள் வீசப்பட்டன.
மஹாராஷ்டிராவில் உள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கு நாளை மறுநாள் தேர்தல் நடக்கிறது. இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைய உள்ளதால், அரசியல் கட்சியினர் இறுதிகட்ட ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமராவதி மாவட்டத்தில் உள்ள தர்யாபூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் ரமேஷ் பண்டிலேவுக்கு ஆதரவாக, அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., நவ்நீத் கவுர் ராணா நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.
கல்லார் கிராமத்தில் பா.ஜ.,வினர் புடைசூழ, அவர் பேரணியாக சென்று வீதி வீதியாக ஓட்டுகள் சேகரித்தார்.
அப்போது, அப்பகுதியில் இருந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பியதாக கூறப்படுகிறது.
இதற்கு பா.ஜ.,வினரும் பதிலடி கொடுத்ததை அடுத்து, இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து, பிரசார கூட்டத்துக்காக போடப்பட்டிருந்த நாற்காலிகளை எடுத்து இரு தரப்பினரும் வீசிக் கொண்டனர்.
முன்னாள் எம்.பி., நவ்நீத் கவுரை குறிவைத்தும் நாற்காலிகள் வீசப்பட்டன. இதையடுத்து, அவருடன் வந்த பாதுகாவலர்கள் அவரை பத்திரமாக அழைத்துச் சென்றனர்.
இருப்பினும், அவர் சென்ற பாதையில் ஒரு சிலர் தொடர்ந்து நாற்காலிகளை வீசியபடியே இருந்ததால், அதிர்ச்சி அடைந்த பா.ஜ.,வினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மோதலில் ஈடுபட்டவர்களை தடுத்து கலைந்து போகும்படி செய்தனர். அப்பகுதியில் இருந்து சென்ற நவ்நீத் கவுர், கல்லார் போலீசில் புகாரளித்தார்.
அதில், 'கல்லாரில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டபோது, அங்கிருந்த சிலர் அநாகரிகமான செய்கைகள் மற்றும் கூச்சல்களை எழுப்பினர். அதைத் தொடர்ந்து எங்கள் மீது நாற்காலிகளை வீசினர். அதில், ஒரு சிலர் என்மீது எச்சில் துப்பினர்.
'உடன் வந்த பாதுகாவலர்கள் என்னை காப்பாற்றினர். எங்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், ஒட்டுமொத்த ஹிந்து சமூகமும் அமராவதியில் கூடும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.