ADDED : டிச 23, 2024 04:42 AM

ஹைதராபாத் : தெலுங்கானாவில் தியேட்டரில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நடிகர் அல்லு அர்ஜுன் ௧ கோடி ரூபாய் நிவாரணம் வழங்கக் கோரி, ஓஸ்மானியா பல்கலை மாணவர்கள் அவரின் வீட்டின் மீது நேற்று தாக்குதல் நடத்தினர்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் உருவான புஷ்பா - 2: தி ரூல் திரைப்படம் டிச., 5ல் வெளியானது. ஹைதராபாதில் உள்ள சந்தியா தியேட்டரில் இந்த படத்தின் சிறப்பு காட்சி டிச., 4ல் திரையிடப்பட்டது.
திரைப்படத்தை ரசிகர்களுடன் பார்க்க நடிகர் அல்லு அர்ஜுனும் இந்த தியேட்டருக்கு வந்தார். அப்போது கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில், குடும்பத்துடன் படத்திற்கு வந்த ரேவதி, 35, என்ற பெண் உயிரிழந்தார். அவரது 8 வயது மகன் படுகாயமடைந்து மருத்துவமனையில் கோமா நிலையில் சிகிச்சையில் உள்ளார்.
இந்த சம்பவத்திற்கு நடிகர் அல்லு அர்ஜுன் தான் காரணம் என கூறி ஹைதராபாத் போலீசார் அவரை கைது செய்தனர்; பின் ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில், அவரது கைது குறித்து பலரும் காங்கிரசை சேர்ந்த முதல்வர் ரேவந்த் ரெட்டியை விமர்சித்தனர்.
இது குறித்து நேற்று முன்தினம் சட்டசபையில் விளக்கமளித்ததுடன் நடிகர் அல்லு அர்ஜுன் மீது ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டினார். இதற்கு அன்று அர்ஜுன் மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் உயிரிழந்த ரேவதியின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வலியுறுத்தி, ஓஸ்மானியா பல்கலை மாணவர்கள் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டை நேற்று முற்றுகையிட்டனர்.
சிலர் தடுப்புகளை தாண்டி எகிறி குதித்து உள்ளே சென்று, அங்கு இருந்த பூந்தொட்டிகளை அடித்து உடைத்ததுடன், வீட்டின் காவலர்களுடன் கைகலப்பிலும் ஈடுபட்டனர். மேலும் வீட்டின் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.