ADDED : ஜன 28, 2025 07:04 PM

புதுடில்லி: மகா கும்ப மேளாவுக்காக, ஜான்சியிலிருந்து பிரயாக்ராஜூக்கு செல்லும் சிறப்பு ரயில் கதவு மூடப்பட்டிருந்ததால், கோபமடைந்த பயணிகள் ரயில் மீது கற்களை வீசி தாக்கினர்.
மகா கும்பமேளாவுக்கு செல்லும் சிறப்பு ரயில் நேற்று இரவு ஜான்சியில் இருந்து புறப்பட்டது. சிறிது நேரத்திலேயே, ரயில் ஜான்சி பிரிவின் கீழ் வரும் ஹர்பால்பூர் ரயில் நிலையத்தை அடைந்தது. அங்கு ஏராளமான பயணிகள் ரயில் வருகைக்காக காத்திருந்தனர்.
முன் பதிவு செய்யப்பட்டிருந்த பெட்டிகளின் கதவுகள் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டதும், அங்கு கூடியிருந்த ஆவேசம் அடைந்தனர். கதவுகளை திறக்கும்படி கூறினர்.
உள்ளே இருந்த பயணிகள் திறக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்து, கற்களை வீசித்தாக்கினர். இதனால் ரயிலின் ஜன்னல்கள் உடைந்தன. ரயில்வே காவல்துறை மற்றும் ரயில்வே காவல் படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஜான்சி ரயில்வே பிரிவின் மக்கள் தொடர்பு அதிகாரி மனோஜ் குமார் கூறியதாவது:
இந்த விஷயம் உடனடியாக எங்கள் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது, ஆர்.பி.எப்., மற்றும் ஜி.ஆர்.பி., பாதுகாப்புப் பணியாளர்கள் நிலைமையைக் கட்டுப்படுத்த விரைவான நடவடிக்கை எடுத்தனர். ரயில் பாதுகாப்பாக அதன் அனுப்பப்பட்டது.எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலையைத் தவிர்க்க ரயில் நிலையங்களில் பயணிகள் ஒருவருக்கொருவர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மகா கும்பமேளாவின் போது அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
இவ்வாறு மனோஜ் குமார் கூறினார்.