வரதட்சணை வழக்குகளில் கவனம் தேவை: சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
வரதட்சணை வழக்குகளில் கவனம் தேவை: சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
ADDED : டிச 11, 2024 03:56 PM

புதுடில்லி: வரதட்சணை வழக்குகளில் தீர்ப்பு வழங்கும்போது, அப்பாவி மக்கள் தேவையில்லாமல் துன்புறுத்தப்படுவதை தடுக்க விசாரணை நீதிமன்றங்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
கர்நாடகாவில் ஐ.டி., துறையில் பணிபுரியும் அதுல் சுபாஷ்(34) என்பவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்வதற்கு முன்னர் 90 நிமிட வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதில், அதிக சம்பளம் பெறும் மனைவி விவகாரத்திற்கு பிறகு அதிக பராமரிப்பு தொகையாக ரூ.4 லட்சம் கேட்டார். உறவினர்கள் மீது பொய் வழக்கு தொடர்ந்தார். விவாகரத்து வழக்கில் பராமரிப்பு தொகையை குறைக்க பெண் நீதிபதி லஞ்சம் கேட்டார். தன் மீதும், குடும்பத்தினர் மீதும் மனைவி குடும்பத்தினர் வரதட்சணை புகார் கொடுத்தார் என அடுக்கடுக்கான புகார்களை கூறியிருந்தார். இந்த விவகாரம் இந்திய அளவில் கவனத்தை பெற்றது.
இந்நிலையில், வரதட்சணை புகார் தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பிவி நாகரத்னா மற்றும் நீதிபதி கோடிஸ்வர் சிங் அமர்வு கூறியதாவது: திருமண பிரச்னை காரணமாக குடும்பத் தகராறு ஏற்படும் போது கணவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் சிக்க வைக்கும் போக்கு அதிகரித்து உள்ளது என்பது நீதித்துறை அனுபவம் மூலம் நன்கு அறியப்பட்ட உண்மையாகும். சட்ட விதிகள் மற்றும் சட்ட நடைமுறைகளை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், அப்பாவி குடும்ப உறுப்பினர்கள் தேவையற்ற துன்பங்களை சந்திப்பதை தவிர்க்கவும் இதுபோன்ற வழக்குகளில் நீதிமன்றங்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.
திருமண அமைப்புக்குள் உள்ள பிரச்னை காரணமாக, அது சார்ந்த பிரச்னைகள் அதிகரித்து வருகிறது. இதனால், ஐ.பி.சி., 498ஏ( பெண்களை கணவர் மற்றும் உறவினர்கள் கொடுமைபடுத்துபவர்களுக்கு தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு) சட்டத்தின் கீழ் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக பெண்கள் அதிகளவில் புகார் அளித்து வருகின்றனர். திருமணம் தொடர்பான பிரச்னைகளின் போது தெளிவற்ற மற்றும் பொதுவான குற்றச்சாட்டுகளை தீவிரமாக ஆராயாவிட்டால், சட்ட செயல்முறைகளை தவறாக பயன்படுத்த வழிவகுக்கும்.
சில சமயங்களில் மனைவியின் நியாயமற்ற கோரிக்கைகளுக்கு இணங்குவதற்காக கணவன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக ஐபிசி 498(ஏ) பிரிவை பயன்படுத்துவதும் நடக்கிறது. அதற்காக பாதிக்கப்படும் பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்ற அர்த்தம் இல்லை. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.