பாகிஸ்தானுக்கு அளிக்கும் நிதி உதவியை நிறுத்துங்கள்!: ஐ.எம்.எப்., அமைப்புக்கு ராஜ்நாத் வலியுறுத்தல்
பாகிஸ்தானுக்கு அளிக்கும் நிதி உதவியை நிறுத்துங்கள்!: ஐ.எம்.எப்., அமைப்புக்கு ராஜ்நாத் வலியுறுத்தல்
ADDED : மே 16, 2025 11:39 PM

ஆமதாபாத்: ''பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்கும் முடிவை, ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நாணய நிதியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். நம் ராணுவத்தால் அழிக்கப்பட்ட பயங்கரவாத உட்கட்டமைப்புகளை மீண்டும் கட்டி எழுப்ப இந்த நிதி பயன்படுத்தப்படலாம். அந்நாட்டுக்கு அளிக்கப்படும் எந்தவொரு நிதியும் பயங்கரவாதத்துக்கான மறைமுக ஆதரவுக்கு சமம்,'' என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பட்டார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின், பாகிஸ்தான் கதறும் விதமாக நம் ராணுவம் பதிலடி தந்தது. நான்கு நாட்களாக நீடித்த மோதல், பாக்., கெஞ்சியதை அடுத்து முடிவுக்கு வந்தது.
இவை நடந்து முடிந்த சில தினங்களிலேயே, பாகிஸ்தானுக்கு 8,350 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக, ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நாணய நிதியம் அறிவித்தது. இதற்கு நம் நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள புஜ் விமானப்படை தளத்திற்கு, பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் நேற்று சென்றார். பாக்., ராணுவத்தால் குறிவைக்கப்பட்ட விமானப்படை தளங்களில் இதுவும் ஒன்று.
புஜ் விமானப்படை தளத்தில், வீரர்களிடையே ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
'ஆப்பரேஷன் சிந்துார்' இன்னும் முடியவில்லை. தற்போதைய போர் நிறுத்தம் என்பது, பாகிஸ்தானுக்கு வைக்கப்பட்டிருக்கும் ஒரு சோதனை. மோசமான நடவடிக்கைகளை அந்நாடு மாற்றிக் கொண்டால் நல்லது. இல்லை என்றால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
பாகிஸ்தானுக்கு நாம் யாரென்று நிரூபித்து விட்டோம். அந்நாடு இனியும் வாலாட்ட முடியாது. பாகிஸ்தானுக்கு எதிரான நம் நடவடிக்கைகள், வெறும் 'டிரெய்லர்' தான். தேவைப்பட்டால், முழு படத்தையும் காண்பிப்போம். பயங்கரவாதத்தை ஒழிப்பது தான், புதிய இந்தியாவின் நோக்கம்.
ஐ.நா.,வால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஜெய்ஷ் - இ - முகமது தலைவர் மசூத் அசாருக்கு, 14 கோடி ரூபாய் வழங்குவதாக பாக்., அறிவித்துள்ளது. அதாவது, நம் ராணுவத்தினரால், முரித்கே, பஹவல்பூர் ஆகிய இடங்களில் அழிக்கப்பட்ட பயங்கரவாத உட்கட்டமைப்பை மீண்டும் கட்டி எழுப்ப, இந்த நிதியுதவியை பாக்., அரசு வழங்குகிறது.
பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிக்கும் பாகிஸ்தானுக்கு, ஐ.எம்.எப்., எந்த உதவியும் செய்யக் கூடாது. அந்நாட்டுக்கு, 8,350 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க ஒப்புக்கொண்டது குறித்து, ஐ.எம்.எப்., மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இந்த நிதியுதவி, பயங்கரவாத உட்கட்டமைப்புக்கு பயன்படுத்தப்படலாம். எதிர்காலத்தில், பாகிஸ்தானுக்கு ஐ.எம்.எப்., எந்த உதவியும் செய்யக் கூடாது. பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் எந்தவொரு நிதியுதவியும், பயங்கரவாதத்துக்கு அளிக்கப்படும் மறைமுக ஆதரவுக்கு சமம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாக்., தாக்குதல் நடத்தியதை அடுத்து, அந்நாட்டின், ராணுவ மற்றும் விமானப்படை தளங்களை குறிவைத்து நம் முப்படையினர் தாக்கினர்.
இந்நிலையில், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள போலாரி விமானப்படை தளத்தில், நம் முப்படையினர் நடத்திய தாக்குதலில், ஆறு விமானப்படையினர் உயிரிழந்தனர். இந்த தகவலை சிந்து மாகாண முதல்வர் முராத் அலி ஷா நேற்று உறுதிப்படுத்தினார்.