மனம் போனபடி பேசுவதை நிறுத்துங்க.. சுதாகர் மீது பிரீத்தம் கவுடா பாய்ச்சல்
மனம் போனபடி பேசுவதை நிறுத்துங்க.. சுதாகர் மீது பிரீத்தம் கவுடா பாய்ச்சல்
ADDED : ஜன 30, 2025 08:48 PM

பெங்களூரு; ''தன்னை காப்பாற்றி கொள்ள முடியாத சுதாகர், அரசியலுக்கு லாயக்கு அற்றவர்,'' என, பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., பிரீத்தம் கவுடா தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி: சுதாகருக்கு பா.ஜ., அனைத்து வாய்ப்புகளையும் வழங்கியது. அவர் எதையும் செய்யவில்லை. மற்றவருக்கு வாய்ப்பு கொடுத்த போது, சுதாகர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
ஒவ்வொருவரும் மனம் போனபடி பேசுகின்றனர். ஒருவர் சமாதி கட்டுவதாக கூறுகிறார்; மற்றொருவர் ஒழித்து கட்டுவதாக கூறுகிறார்.
சொந்த பலத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், மற்றவரை ஒழிக்க முற்படுவர். தன்னை காப்பாற்றி கொள்ளும் கலையை அறிந்தவர், அரசியலில் இருக்க வேண்டும்.
இல்லையென்றால் வீட்டில் இருக்க வேண்டும். தடைகளை மீறி கட்சியை பலப்படுத்தி, மக்களின் மனதை வெல்ல வேண்டும்.
சீட் கொடுத்தால் கட்சி நல்லது; கொடுக்கா விட்டால் கெட்டதா. சிக்கபல்லாபூர் எம்.பி., என்பதால், சுதாகருக்கு சிக்கபல்லாபூரை எழுதி தரவில்லை.
அவர் கட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஆகின்றன. கட்சி முழுதும், தன் பேச்சை கேட்க வேண்டும் என்ற மனப்போக்கை, சுதாகர் கைவிட வேண்டும்.
இவருக்கு கட்சி மூன்று முறை சீட் தந்தது. நான்கு ஆண்டு அமைச்சராக இருந்தார். இப்போது எம்.பி.,யாக இருக்கிறார். அவருக்கு மாநில தலைவராக, முதல்வராக ஆசை இருக்கலாம். அது எனக்கு தெரியவில்லை.
விஜயேந்திராவின் சக்தியை பற்றி, சுதாகர் பேச வேண்டாம். இவர், தன் பேச்சு பாணியை மாற்றி கொள்ள வேண்டும். மேலிட தலைவர்கள், சுதாகரை அழைத்து பேச வேண்டும்.
சட்டசபை தேர்தலில் தோற்ற இவருக்கு, கட்சி எம்.பி., சீட் கொடுத்தது. கட்சி நடைமுறையை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
சுதாகரோ அல்லது நானோ, சாதாரண தொண்டர்கள்தான். தொண்டர்கள், தொண்டராகவே இருக்க வேண்டும். அகங்காரத்துடன் பேச கூடாது. எடியூரப்பாவை பற்றி பேசியது சரியல்ல. இது சினிமா அல்ல. அரசியலில் திருப்தி அவசியம்.
சிக்கபல்லாபூர் மாவட்டத்தில், கட்சியை ஒரே ஒரு சட்டசபை தொகுதியிலும் வெற்றி பெற வைக்க, அவரால் முடியவில்லை. ஆனால் பெரிதாக பேசுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.

