மிரட்டல் தொனியிலான வார்த்தைகள் பயன்படுத்துவதை 'நிறுத்துங்கள்!': பாக்கிற்கு எச்சரிக்கை
மிரட்டல் தொனியிலான வார்த்தைகள் பயன்படுத்துவதை 'நிறுத்துங்கள்!': பாக்கிற்கு எச்சரிக்கை
ADDED : ஆக 15, 2025 01:00 AM

புதுடில்லி: ''இந்தியாவுக்கு எதிராக மிரட்டல் தொனியில் பேசுவதை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி அசிம் முனீர் நிறுத்த வேண்டும்; இல்லையெனில், மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்,'' என, வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல் பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக, மே 7ல், 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை நம் ராணுவத்தினர் அழித்தனர். இதில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தரும் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும் வகையில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்தது.
இந்த நதி மூலம், 80 சதவீத நீர் தேவையை பூர்த்தி செய்த பாக்., தற்போது தண்ணீர் இல்லாததால் திண்டாடி வருகிறது. அமெரிக்காவுக்கு கடந்த வாரம் சென்ற பாக்., ராணுவ தளபதி அசிம் முனீர், அங்கிருந்தபடி நம் நாட்டுக்கு எதிராக கொக்கரித்தார்.
அவர் பேசுகையில், 'சிந்து நதி இந்தியாவின் சொத்து அல்ல. தண்ணீரை நிறுத்தினால் சும்மா இருக்க மாட்டோம். இந்தியா அணை கட்டும் வரை காத்திருப்போம். அதன்பின், 10 ஏவுகணைகளை வீசி அணையை தகர்ப்போம்.
'எதிர் காலத்தில் இந்தியா உடனான மோதலில் பாகிஸ்தானின் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், அணு ஆயுதப் போர் மூலம் உலகின் பாதி நாடுகளை அழித்து விடுவோம்' என, மிரட்டல் தொனியில் பேசினார்.
இஸ்லாமாபாதில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீபும் நம் நாட்டை சீண்டும் வகையில் பூச்சாண்டி காட்டினார்.
அவர் பேசுகையில், 'எங்களுக்கு சேர வேண்டிய நீரை தடுத்தால், அதில் ஒரு சொட்டு நீரை கூட இந்தியாவால் பயன்படுத்த முடியாது. நீரை வைத்து மிரட்டினால், காதுகள் கிழியும் அளவுக்கு தக்க பாடம் புகட்டுவோம்' என்றார்.
பல முறை அடி வாங்கியும் திருந்தாத பாக்., எந்த தைரியத்தில் இப்படி பேசுகிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது.
இந்நிலையில், டில்லியில்
தொடர்ச்சி 8ம் பக்கம்
'நிறுத்துங்கள்!'
முதல் பக்கத் தொடர்ச்சி
செய்தியாளர்களிடம், வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் நேற்று கூறியதாவது:
இந்தியாவுக்கு எதிராக பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி அசிம் முனீர் ஆகியோர் தொடர்ச்சியாக பொறுப்பற்ற முறையிலும், போர் வெறி மற்றும் வெறுப்புடன் பேசி வருகின்றனர். தங்களின் சொந்த தோல்வியை மூடி மறைக்க, இந்தியாவுக்கு எதிராக பேசுவது என்பது, பாக்., தலைமையின் நன்கு அறியப்பட்ட செயல்முறை.
இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து மிரட்டல் தொனியில் பேசினால், நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். இதுவரை கண்டிராத மோசமான விளைவுகளை பாக்., சந்திக்க வேண்டி இருக்கும். அந்நாடு இதுவரை பார்த்ததெல்லாம், 'டிரெய்லர்' தான். வாய் இருக்கிறது என பேசிக் கொண்டே இருந்தால், முழு படத்தையும் பார்க்க வேண்டி இருக்கும். அதனால், நாவடக்கத்தோடு பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி அசிம் முனீர் பேச வேண்டும்.
சிந்து நதி நீர் ஒப்பந்த விவகாரத்தில், நடுவர் நீதிமன்றம் என அழைக்கப்படும் அமைப்பின் சட்டப்பூர்வ தன்மையை இந்தியா ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. எனவே, அதன் அறிவிப்புகள் அதிகார வரம்பற்றவை; சட்டப்பூர்வ நிலைப்பாடு இல்லாதவை. அந்த அமைப்பின் உத்தரவுகள், இந்தியாவின் நீரைப் பயன்படுத்துவதற்கான உரிமைகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
இவ்வாறு அவர் கூறினார்.