தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளை மீண்டும் கடுமையாக சாடிய சுப்ரீம் கோர்ட்!
தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளை மீண்டும் கடுமையாக சாடிய சுப்ரீம் கோர்ட்!
ADDED : அக் 31, 2025 01:39 PM

புதுடில்லி: 'தெருநாய்கள் தொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவை மாநில அரசுகள் மதிப்பதில்லை. தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராக வேண்டும்' என சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது.
நாட்டில் வெறிநாய்க்கடி மற்றும் அதனால் ரேபிஸ் நோய் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் நாளிதழ்களில் வெளியான செய்திகள் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து வழக்காக எடுத்துக் கொண்டது. இந்த வழக்கை விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரிக்கிறது. பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத தலைமை செயலாளர்களுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தமிழகம் உள்பட 26 தலைமைச் செயலாளர்கள் நவம்பர் 3ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இன்று (அக் 31) சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இந்த விஷயத்தைக் குறிப்பிட்டு, நவம்பர் 3ம் தேதி  தலைமைச் செயலாளர்களை நேரில் வருவதற்குப் பதிலாக, அவர்கள் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜராக அனுமதிக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தார்.
இந்த கோரிக்கையை, சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு ஏற்க மறுத்துவிட்டது. அப்போது சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் கூறியதாவது:
நாங்கள் அவர்களை  பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யச் சொல்லும்போது, அவர்கள் அதை கண்டு கொள்ளாமல் தூங்கிக் கொண்டிருந்தார்கள். நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கவில்லை.
நகராட்சி நிறுவனங்கள், மாநில அரசுகள் பல ஆண்டுகளாக தீர்க்க வேண்டிய பிரச்னைகளைச் சமாளிக்க நீதிமன்றம் நேரத்தை வீணடிப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தலைமைச் செயலாளர்கள் நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

