இளம் வயதினரையும் பாதிக்கும் பக்கவாதம்: மருத்துவ ஆய்வில் அதிர்ச்சி
இளம் வயதினரையும் பாதிக்கும் பக்கவாதம்: மருத்துவ ஆய்வில் அதிர்ச்சி
ADDED : ஜன 16, 2024 04:50 PM

புதுடில்லி: வயதானவர்களை அதிகம் தாக்கி வந்த பக்கவாதத்தால், தற்போது இளம் வயதினரை குறிப்பாக டீன் ஏஜ் வயதில் உள்ளவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளது டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மூளை செயல்பட தேவையான சத்து, இதயத்தில் இருந்து ரத்த குழாய்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும் போது, மூளையில் சில பாகங்கள் செயல் இழப்பதால், நம் உடலின் சில பாகங்கள் செயல் இழக்கின்றன. இதனை தான் பக்கவாதம் என்கிறோம். இதனால், வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தனர்.
தற்போது, இந்த பக்கவாதத்தால், இளம் வயதினரும் அதிகம் பாதிக்கப்படுவது டில்லி எய்ம்ஸ் மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. 20 வயதுக்கு உட்பட்டவர்களில் 100ல் 2 பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒராண்டில் 21 முதல் 45 வயது வரை உள்ளவர்களில் 300 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 77 பேர் சிகிச்சை பெற்றனர்.
இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை ஆய்வு செய்ததில், அதிக ரத்த அழுத்தம் அவர்களுக்கு இருப்பது தெரியவந்துள்ளது. 260 பேரை ஆய்வு செய்ததில் 65 சதவீதம் பேருக்கு அதிக ரத்த அழுத்தம் உள்ளது. சர்க்கரை, ரத்த அழுத்தம், புகைபிடித்தல் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்துவதன் மூலம் பக்கவாதம் ஏற்படுவதை 85 சதவீதம் தடுக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.