ADDED : நவ 01, 2024 11:26 PM

பெங்களூரு; ''சமூக வலைதளங்களில் கன்னட மொழி, கன்னடர்கள் குறித்து அவதுாறாக பேசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூரு கன்டீரவா மைதானத்தில் பள்ளி கல்வி துறை சார்பில் நடந்த கன்னட ராஜ்யோத்சவா விழாவை துவக்கி வைத்து முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
கர்நாடகாவுக்கு நியாயமாக வழங்க வேண்டிய வரி பங்கீட்டை கேட்டால், அரசை கவிழ்க்க முயற்சிக்கின்றனர். இதை கன்னடர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கர்நாடகாவுக்கு 15வது நிதிக் கமிஷன், அநீதி இழைத்துவிட்டது. இதை சரிசெய்ய கோரி, மத்திய அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், நீதி கிடைக்கவில்லை. நமது நியாயமான பங்கை கேட்கும் வலிமையை வளர்த்து கொள்ளும் போது தான், இதற்கு தீர்வு கிடைக்கும்.
மாநிலத்தில் இருந்து லோக்சபா, ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், இந்த அநீதிக்கு எதிராக பார்லிமென்டில் குரல் எழுப்ப வேண்டும்.
இத்தனை அநீதிகளுக்கு மத்தியில், மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறோம். மாநிலத்தின் அனைத்து பகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 'கர்நாடகா' என பெயரிட்டு, 51 ஆண்டுகளாகிறது.
நடவடிக்கை
சமூக வலைதளங்களில் கன்னடர்களையும், கன்னட மொழியையும் இழிவுபடுத்தும் போக்கு அதிகரித்து வருவது சரியல்ல. இதுபோன்ற சம்பவங்கள் மீது எந்தவித தயக்கமும் இன்றி நடவடிக்கை எடுப்போம்.
கர்நாடகாவில் 200க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இவர்கள் எந்த ஜாதி, மதமாக இருந்தாலும், எங்கிருந்தாலும், இங்குள்ள நிலம், காற்று, நீரை பயன்படுத்துவோர் கன்னடர்களே. கன்னட மொழிக்கு, 7,000 ஆண்டுகள் வரலாறு உள்ளது. மத்திய அரசும் இதை செம்மொழியாக அங்கீகரித்துள்ளது.
நம் மொழியை தியாகம் செய்ய வேண்டாம். மொழி வெறி இருக்க கூடாது. அதேவேளையில் நம் மொழியை போற்றுவதை விட்டுவிடக்கூடாது. உணர்வின்றி எப்படி மொழி வளரும். மற்ற மொழியை படிக்க கூடாது என்று சொல்லவில்லை. அதேவேளையில், நமது மொழியை மறக்காதீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
கன்னட ராஜ்யோத்சவாவை ஒட்டி, புவனேஸ்வரி தாய் சிலைக்கு முதல்வர் சித்தராமையா மலர் துாவி வணங்கினார்.