வலிமையாகும் பாதுகாப்பு: அமெரிக்காவிடம் இருந்து அதிரடி தாக்குதல் டிரோன் வாங்க இந்தியா முடிவு
வலிமையாகும் பாதுகாப்பு: அமெரிக்காவிடம் இருந்து அதிரடி தாக்குதல் டிரோன் வாங்க இந்தியா முடிவு
ADDED : செப் 15, 2024 07:09 AM

புதுடில்லி: எதிரிப்படையினர் மீது அதிரடி தாக்குதல் நடத்துவதற்கு ஏற்ற 31 அதிநவீன டிரோன்களை அமெரிக்காவிடம் வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இந்தியா வாங்க உள்ள இந்த டிரோன்கள் தொடர்ந்து 40 மணி நேரம் 40 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் திறன் பெற்றது. இவை 'ஹன்டர் கில்லர்' என்ற வகையைச் சேர்ந்த அதிரடி தாக்குதலுக்கான டிரோன்கள் ஆகும்.
இந்த டிரோன்களில் ஹெல்பைர் ஏவுகணைகள், நேவிகேசன் அமைப்பு, தரையில் இருந்து கட்டுப்படுத்தும் சாதனங்கள் உள்ளிட்டவையும் நிறுவப்பட்டிருக்கும். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை பொருத்தி பயன்படுத்த முடியும்.
இந்திய மதிப்பில் 33,500 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்திற்கு, பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்பந்த பேச்சுவார்த்தை குழுவானது ஒப்புதல் அளித்து உள்ளது. தொடர்ந்து, அதனை நிதி அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்க உள்ளது.அ ங்கு ஒப்புதல் கிடைத்த உடன், பிரதமர் தலைமையிலான பாதுகாப்பு குழுவின் இறுதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அக்., மாதம் இந்த ஒப்பந்தம் கையெழுத்துஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை இந்தியாவில் வைத்து பராமரித்தல், சரி செய்தல் ஆகியவற்றிற்கு இந்தியாவில் மையம் அமைப்பதுடன், டிரோன்களுக்கு தேவையான தொழில்நுட்ப ஆதரவு வழங்கவும் அமெரிக்கா ஒப்புதல் அளித்து உள்ளது.
இந்த டிரோன்களானது போர்க்கப்பல் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை எதிர்க்கும் வல்லமை பெற்றுது. இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி செய்யும் நேரத்தில், இந்த டிரோன்களின் வருகை இந்தியாவின் பலத்தை மேலும் அதிகரிக்கும்.