காதலியை சூட்கேசுக்குள் மறைத்து விடுதிக்கு அழைத்து வந்த மாணவர்
காதலியை சூட்கேசுக்குள் மறைத்து விடுதிக்கு அழைத்து வந்த மாணவர்
ADDED : ஏப் 13, 2025 12:37 AM

சண்டிகர்: ஹரியானாவில், தனியார் பல்கலை ஆண்கள் விடுதிக்குள், தன் காதலியை சூட்கேஸில் மறைத்து, அழைத்து வந்த மாணவரால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் ஓ.பி.ஜிண்டால் பல்கலை உள்ளது. இங்குள்ள மாணவர் விடுதியில், ஏராளமானோர் தங்கி படித்து வருகின்றனர்.
அனுமதி கிடையாது
மாணவர் விடுதிக்குள் பெண்களுக்கு அனுமதி கிடையாது என்பதால், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பாதுகாவலர்களுக்கு தெரியாமல், மாணவர் ஒருவர் தன் காதலியை பெரிய சூட்கேஸில் மறைத்து வைத்து, விடுதிக்குள் அழைத்து வந்தபோது கையும் களவுமாக சிக்கினார்.
இழுத்துச் செல்லும் டிராலி பேக் வகை சூட்கேசை, வெளியில் இருந்து விடுதிக்குள் அந்த மாணவர் கொண்டு வந்தார். அவர் விடுமுறை முடிந்து, ஊரில் இருந்து திரும்பியதால் விடுதி பாதுகாவலர்களுக்கு சந்தேகம் ஏற்படவில்லை.
ஆனால், சுவர் மீது லேசாக டிராலி பேக் இடித்தபோது, உள்ளுக்குள் இருந்து லேசான அலறல் சத்தம் கேட்டது. இதைஅடுத்து, அந்த மாணவரை தடுத்து நிறுத்தி, அவர் இழுத்து வந்த பேக்கை சோதனையிட்டபோது, அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
டிராலி பேக் உள்ளே, ஒரு பெண் குத்துக்காலிட்டு சுருண்டபடி அமர்ந்திருந்தார். பேக்கை திறந்ததும், உள்ளே இருந்து அந்த பெண் வெளியே வந்தார். பெண், அந்த மாணவரின் காதலி என தெரிகிறது.
குறும்புத்தனம்
டிராலி பேக்கில் பெண் இருந்த காட்சிகளை விடுதியின் ஒரு அறையில் இருந்த மாணவர் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டதால், இந்த சம்பவம் நேற்று வெளிச்சத்துக்கு வந்தது.
இது குறித்து விளக்கம் அளித்த பல்கலை நிர்வாகம், 'இது பெரிய விஷயம் கிடையாது. மாணவர்கள் இதுபோல் குறும்புத்தனமாக செயல்படுவது வழக்கம் தான்.
'இது தொடர்பாக யாரும் புகார் அளிக்கவில்லை. இதனால், பல்கலை தரப்பில் இருந்து இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை' என, தெரிவித்துள்ளது.

